சதீரவின் சதத்தினால் வலுப்பெற்ற தமிழ் யூனியன் கழகம்

SLC Major League Tournament 2022

189

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) ஆரம்பமாகியது.

இலங்கையில் உள்ள 26 கழகங்கள் பங்குகொண்ட இம்முறை போட்டித் தொடரில் குழு A இருந்து தோல்வியடையாத அணியாக கொழும்பு கிரிக்கெட் கழகமும், குழு B இல் இருந்து தமிழ் யூனியன் கழகமும் தத்தமது பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

இதன்படி, கொழும்பு SSC மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தமிழ் யூனியன் கழகத்தின் அணித் தலைவர் சதீர சமரவிக்ரம முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தமிழ் யூனியன் கழகத்துக்கு நவோத் பரணவிதான மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி சத இணைப்பாட்டமொன்றைப் பெற்றுக் கொண்டனர்.

முதல் விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, நவோத் பரணவிதான 54 ஓட்டங்களுடன் விஷ்வ பெர்னாண்டோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து அணித் தலைவர் சதீரவுடன் ரொன் சந்த்ரகுப்த ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2ஆவது விக்கெட்டுக்கு 130 ஓட்டங்களை சேர்த்தனர். இதில் ரொன் சந்த்ரகுப்த 2 ஓட்டங்களால் அரைச்சதத்தை தவறவிட்டு 48 ஓட்டங்களுடன் மாலிந்த புஷ்பகுமாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த சந்தூஷ; குணதிலக்க (15), கமேஷ் நிர்மால் (16) ஆகிய இருவரும் லக்ஷான் சந்தகெனின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழநது ஏமாற்றம் கொடுத்தனர்.

எனவே, போதிய வெளிச்சமிண்மை காரணமாக போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமிழ் யூனியன் கழகம் 84 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் தமிழ் யூனியன் கழகம் சார்பில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம் வருகின்ற சதீர சமரவிக்ரம, 243 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர், 18 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதன்மூலம் முதல்தரப் போட்டிகளில் தனது அதிகபட் ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்த அவர், இம்முறை மேஜர் பிரீமியர் லீக் தொடரில் 5ஆவது சதத்தையும், முதல்தர கிரிக்கெட்டில் 12ஆவது சதத்தையும் பெற்றுக் கொண்டார்.

கொழும்ப கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சு சார்பில் லக்ஷான் சந்தகென் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

நாளை (18) போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கழகம் – 356/6 (84) – சதீர சமரவிக்ரம 188*, நவோத் பரணவிதான 54, ரொன் சந்த்ரகுப்த 48, லக்ஷான் சந்தகென் 2/47, விஷ்வ பெர்னாண்டோ 2/77

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<