மேஜர் லீக்கில் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்த இசுரு உதான

SLC Major League Tournament 2022

209

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (18) நிறைவுக்கு வந்தது.

இதில் சகலதுறை வீரர் இசுரு உதான தமிழ் யூனியன் கழகத்துக்காகவும், மினோத் பானுக கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காகவும் அரைச் சதமடித்து கைகொடுக்க, பந்துவீச்சில் கொழும்பு கழகத்தின் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லக்ஷான் சந்தகென் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (17) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் நேற்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தமிழ் யூனியன் கழகம் சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அணித்தலைவருமான சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 188 ஓட்டங்களைப் பெற்று களத்தில் நின்றார்.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் (18) தமிழ் யூனியன் கழகம் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

போட்டியின் ஆரம்பத்திலேயே அணித் தலைவர் சதீர சமரவிக்ரம 188 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதன்பிறகு திலும் சுதீரவுடன் ஜோடி சேர்ந்த ரவிந்து பெர்னாண்டோ கொழும்பு கழகத்தின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு 6ஆவது விக்கெட்டுக்காக அரைச் சத இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டார். இதில் 50 பந்துகளுக்கு முகங்கொடுத்து 45 ஓட்டங்களைப் பெற்றிருந்த ரவிந்து பெர்னாண்டோ சமிந்து விஜேசிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இசுரு உதான திலும் சுதீரவுடன் இணைந்து அரைச்சத (70) இணைப்பாட்டமொன்றை முன்னெடுத்து அணிக்கு வலுச்சேர்க்க, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலும் சுதீர 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், தமிழ் யூனியன் கழகத்துக்காக அதிரடியாக ஆடி துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொடுத்த இசுரு உதான 72 பந்துகளில் 88 ஓட்டங்களை எடுத்த நிலையில் விஷ்வ பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இசுரு உதானவின் ஆட்டமிழப்பிற்குப் பிறகு பின் வரிசையில் களமிறங்கி துடுப்பாட்டத்தில் நம்பிக்கை கொடுத்த கவிந்து பத்திரன நிதானமாக அரைச்சதத்தை (46) நோக்கி துடுப்பெடுத்தாடியிருந்தார். பின்னர், அவர் சந்தகெனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.

இதன்படி, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 558 ஓட்டங்களைக் குவித்தது. இம்முறை மேஜர் லீக்கில் அந்த அணி பதிவு செய்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியதுடன், இம்முறை போட்டித் தொடரில் அணியொன்று குவித்த 2ஆவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இடம்பிடித்தது.

கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லக்ஷான் சந்தகென் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம், தங்களுடைய முதல் விக்கெட்டினை 8 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சொனால் தினூஷ (4) ஷிரான் பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 33 ஓட்டங்களை எடுத்த நிமேஷ குணசிங்க கவிந்து பத்திரனவின் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதன்படி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது முதல் இன்னிங்ஸுக்காக விளையாடி வருகின்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை எடுத்திருந்தது.

மினோத் பானுக 72 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை (19) போட்டியின் மூன்றாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கழகம் – 558 (135.2) – சதீர சமரவிக்ரம 188, இசுரு உதான 88, நவோத் பரணவிதான 54, ரொன் சந்த்ரகுப்த 48, கவிந்து பத்திரன 46, ரவிந்து பெர்னாண்டோ 45, விஷ்வ பெர்னாண்டோ 4/102, லக்ஷான் சந்தகென் 4/128

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 149/2 (29) – மினோத் பானுக 72*, நிமேஷ குணசிங்க 33, கமிந்து மெண்டிஸ் 31*, ஷிரான் பெர்னாண்டோ 1/35

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<