“SLC கிரேய்ஸ் அணியின் வெற்றிக்கு காரணம் இளம் வீரர்கள்” – ஷானக

94
Dasun Shanka Interview

Dialog-SLC அழைப்பு T20 தொடரின் சம்பியன் கிண்ணத்தை வென்றமைக்கு முக்கிய காரணம், அணியிலிருக்கும் இளம் வீரர்களின் பங்களிப்பு என்று SLC கிரேய்ஸ் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில், SLC ரெட்ஸ் அணியை எதிர்கொண்ட SLC கிரேய்ஸ் அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

>> Dialog-SLC T20 லீக் சம்பியனாகிய தசுன் ஷானகவின் SLC கிரேய்ஸ்!

தசுன் ஷானக தலைமையில் களமிறங்கிய கிரேய்ஸ் அணியில் அதிகமான இளம் வீரர்கள் பிரகாசித்திருந்தனர். அந்தவகையில், இந்த வெற்றிக்கு இளம் வீரர்கள் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்தமைதான் காரணம் என தசுன் ஷானக குறிப்பிட்டார்.

“எமது இளம் அணி தொடர் முழுவதும் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியது. இதுதான் அணியொன்றுக்கு தேவையான விடயம். இந்த விடயங்கள்தான் அணிக்கு முக்கியமானது.  ரெட்ஸ் அணியில் 7 அல்லது 8 தேசிய அணி வீரர்கள் இருந்தனர். ரெட்ஸ் அணி சிறந்தவொரு அணி. அவர்களுக்கு எதிராக பெறப்பட்ட இந்த வெற்றி மிகச்சிறந்த வெற்றியாகும்” என தசுன் ஷானக தெரிவித்தார்.

அதேநேரம், இளம் வீரர் நுவனிந்து பெர்னாண்டோ தொடர்பிலும் தசுன் ஷானக கருத்து வெளியிட்டார். “நுவனிந்து பெர்னாண்டோவுக்கு முதல் இலக்கங்களில் துடுப்பெடுத்தாட வாய்ப்பு கொடுக்க எண்ணினோம். எனினும், அவரால் முதல் போட்டிகளில் அதனை செய்ய முடியவில்லை. எனினும், கடைசி போட்டியில் 50 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனவே, அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.

குறிப்பாக இளம் வீரர் ஒருவர் இறுதிப் போட்டியொன்றில், முதல் இலக்கங்களில் களமிறங்கி சிறப்பாக பிரகாசித்தால், அவருக்கு சிறந்த நம்பிக்கை ஏற்படும். அதேபோன்று, நுவனிந்து பெர்னாண்டோ குறித்த விடயத்தை சரியாக செய்தார்” என்றார்.

இதேநேரம், தசுன் ஷானக தனக்கு கிடைத்த ஆட்டநாயகனுக்கான பரிசுத்தொகையை களுபோவில வைத்தியசாலைக்கு நிதியுதவி வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

“தற்போதைய கொவிட்-19 நிலைமையை கருத்திற்கொண்டு, களுபோவில வைத்தியசாலையில், தனியொரு சிகிச்சை தொகுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக தேசிய அணி வீரர்களுக்கு அறியக்கிடைத்தது. எனவே, அதற்கு உதவுவதற்கு நினைக்கிறோம். எனவே, ஆட்டநாயகன் விருதுக்காக கிடைத்த தொகையை, குறித்த நிர்மாணப்பணிக்காக வழங்க எதிர்பார்க்கிறேன். அத்துடன், வீரர்களாக இதற்காக ஒரு தொகை பணத்தை சேர்த்து வருகின்றோம்” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<