19 வயகுக்குட்பட்டோருக்கான புதிய லீக் தொடர் ஜுனில் ஆரம்பம்

95
 

19 வயதுக்குட்பட்ட வீரர்களை இலக்காகக் கொண்டு இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்ய இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் மற்றும் அதனைத் தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியைத் தயார்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டித் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதேபோல, இந்த போட்டித் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் அஸ்கிரிய கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளது.

அத்துடன், இந்தப் போட்டித் தொடரில் கொழும்பு தெற்கு, கொழும்பு வடக்கு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய ஐந்து அணிகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முக்கிய அம்சம் என்னவெனில் கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் சபையினால் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மட்ட லீக் தொடர்களில் இடம்பிடித்து வந்த யாழ்ப்பாணம் என்ற பெயரிலான அணி, SLC இன்19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் உள்ளடக்கப்படவில்லை.

இதனிடையே, ரஞ்சித் மதுரசிங்க தலைமையிலான கனிஷ்ட தேர்வுக் குழுவினால் ஒவ்வொரு அணிகளுக்கும் வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும் 13 வீரர்கள் மற்றும் இரண்டு மேலதிக வீரர்கள் உள்ளடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அத்துடன், 50 ஓவர்கள் கொண்ட இப்போட்டித் தொடரில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில 19 வயதின்கீழ் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் உள்ளிட்ட 7 புதிய திட்டங்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பிரதான கழகங்களுக்கிடையிலான மேஜர் கழகப் போட்டித் தொடரில் பங்குபற்றும் அனைத்து கழகங்களுக்கும் வழங்கப்படுகின்ற நிதியை இந்த ஆண்டு முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டு முதல் கழகமொன்றுக்கு 2.5 மில்லியன் ரூபா நிதி மேலதிகமாக வழங்கப்படும். இந்த அதிகரிப்புடன், ஒவ்வொரு கழகமும் ஆண்டொன்றுக்கு 27.5 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்றுக்கொள்ளும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் 715 மில்லியன் ரூபாய் நிதி முதல்தர கழகங்களுக்காக வழங்கப்படுகின்ற போட்டித் தொடர் நிதிக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, சொந்த மைதானங்களைக் கொண்ட 09 மேஜர் கழகங்களுக்கு தலா 5 மில்லியன் ரூபாய் நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த மானியமானது, அந்த கழகங்களின் மைதானங்களையும், உட்கட்டமைப்பையும் பராமரிக்கவும் மேம்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய கழக அரங்கு மற்றும் பார்வையாளர் அரங்கை நிர்மாணிப்பதற்காக கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு வழங்கப்பட்ட 40 மில்லியன் ரூபாய்க்கு மேலதிகமாக, 20 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அத்துடன், மக்கொன, சர்ரே வில்லேஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் சபை சொந்தமான இரண்டு ‘பங்களாக்களை’ புனரமைப்பதுடன் சர்ரே கிரிக்கெட் மைதானத்திற்கு விளையாட வரும் கழக அணிகளுக்கு தங்குமிட வசதியை வழங்க இந்த பங்களாக்கள் பயன்படுத்தப்படும்.

இதற்கிடையில், நடப்பு ஆண்டில் பிரிவு 1 கழகங்கள் மற்றும் பிரதான கழகங்களுக்காக அழைப்பு மகளிர் T20 போட்டித் தொடர் ஒன்றை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<