சக வீரருடன் மோதி இந்தோனேஷிய கோல் காப்பாளர் திடீர் மரணம்

317
indonasian goalkeeper

கால்பந்து போட்டியின்போது சக வீரருடன் மோதுண்ட இந்தோனேஷிய கோல் காப்பாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் முதல் பிரிவு கால்பந்து தொடரில் பங்கேற்ற 38 வயதான சொய்ருல் ஹுதா 15ஆம் திகதி நடைபெற்ற போட்டியிலேயே இந்த பரிதாபத்திற்கு முகம்கொடுத்தார். 

பெர்சலா கால்பந்து கழகத்திற்கு விளையாடி வருகின்ற அவர் செமன் படங் கழகத்துடனான போட்டியின் பாதிநேர ஆட்டத்திற்கு முன்னர் ஏற்பட்ட மோதலின் போது இவ்வாறு மரணித்துள்ளார்.

இந்தோனேஷி சுப்பர் லீக் தொடரில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவை நோக்கி செல்லும் வேளையில் எதிரணி வீரர் கோலை நோக்கி பந்தை எடுத்துவரும்போது அதனை தடுக்கும் முயற்சியாக ஹுதா பந்தை நோக்கி பாய்ந்தார். அப்போது சக அணியின் பின்கள வீரர் ரமோன் ரொட்ரிகஸ் மற்றும் எதிரணியின் முன்கள வீரர் மார்செல் சக்ரமென்டோ ஆகியோர் ஹுதாவுடன் நேருக்கு நேர் மோதுண்டார்.

இந்த சம்பவத்திற்கு பின்னரும் தொடர்ந்து உணர்வுடன் இருந்த கோல் காப்பாளர் ஹுதா தனது நெஞ்சை பிடித்தக்கொண்டு திகைப்பில் தரையை பார்த்தபடி இருந்தார். எனினும் பின்னர் அவரது நிலைமை மோசமடைந்தது.  

தொடர்ந்து உணர்வுடன் இருந்த அவர் நெஞ்சு வலிப்பதாக முறையிட்டார்என்று மருத்துவ குழுவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ‘இதனை அடுத்து அவர் மயக்கம் அடைந்தார்என்று கூறினார்.

எனினும், ஹுதா அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த மோதல் சம்பவத்தால் ஹுதாவின் மூச்சு நின்றிருப்பதாகவும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த மருத்துவமனையின் மருத்துவர் யுடிஸ்டிரோ அன்ட்ரி நுக்ரோஹோ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னரும் போட்டி தொடர்ந்து நடைபெற்றதோடு ஹுதாவின் பெர்சலா அணி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

ஹுதா தனது கால்பந்து வாழ்வில் பெர்சலா அணிக்கு மாத்திரம் விளையாடி இருப்பதோடு அவர் 500க்கும் அதிகமான லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவரது மரணத்தை அடுத்து ஆயிரக்கணக்கான பெர்சலா ரசிகர்கள் மெழுவர்த்தி ஏற்றி அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.