துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தோனி; மும்பைக்கு மற்றுமொரு அதிரடி வெற்றி

879
IPL 2017

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

ரைஸிங் புனே சூபர்ஜயன்ட் எதிர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

இறுதிப் பந்து வரை அதி விறுவிறுப்பாக சென்றிருந்த இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளால் புனே அணி ஹைதராபாத் அணியினை வீழ்த்தியது.

புனே அணியினரின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைஸர்ஸ் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மூலம் போட்டியை மந்தமாகவே தொடங்கியிருந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில், டேவிட் வோர்னர் 43 ஓட்டங்களினை 40 பந்துகளுக்கு பெற்றுக்கொண்டதுடன், இம்ரான் தாஹீரின் பந்து வீச்சில் வீழ்ந்த சீக்கர் தவான் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

தொடர்ந்து களம் நுழைந்த அவுஸ்திரேலிய அணியின் வலதுகை சகலதுறை ஆட்டக்காரர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் பவுண்டரி எல்லைகளை பதம் பார்க்கத் தொடங்கினார்.

இதனால், 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்த நடப்புச் சம்பியன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, 176 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த ஹென்ரிக்ஸ் வெறும் 28 பந்துகளினை மாத்திரம் எதிர் நோக்கி 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

புனே அணியின் பந்து வீச்சில், ஜெய்தேவ் உனட்கேட், டேனியல் கிரிஸ்டியன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் பறிபோன விக்கெட்டுகளை ஒவ்வொன்றாக தம்மிடையே பிரித்துக்கொண்டனர்.

177 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை 20 ஓவர்களில் தொடுவதற்கு பதிலுக்கு ஆடிய புனே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர், ராகுல் திரிபதி அரைச்சதம் கடந்து வெற்றி இலக்கினை நெருங்கிக் கொண்டிருந்த போதிலும் போட்டியின் வெற்றி ஹைதராபாத் அணிக்கு சாதமாகவே இருந்தது.

ரஷிட் கான் மூலம் ரன் அவுட் செய்யப்பட்ட ராகுல் திரிபதி, 41 பந்துகளிற்கு 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இவ்வாறனதொரு நிலையில், களத்தில் நின்று துடுப்பாடிக்கொண்டிருந்த மஹேந்திர சிங் தோனி புனே அணியின் வெற்றியை மனதில் நிறுத்தி அதிரடி காட்டத்தொடங்கினார்.

சமீப காலமாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தினை வெளிக்காட்டிய தோனி, இப்போட்டியின் இறுதிப்பந்து வரை நின்று போட்டியின் வெற்றியாளர்களாக ரைஸிங் புனே சூபர்ஜயன்ட் அணியை மாற்றி தனது துடுப்பாட்ட பாணியை மீண்டும் வழமைக்கு திருப்பினார்.

20 ஓவர்களினையும் எதிர்கொண்ட புனே அணியினர், 4 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களுடன் போட்டியில் வெற்றியடைந்தனர்.

துடுப்பாட்டத்தில், தோனி இறுதி வரை ஆட்டமிழக்காது 34 பந்துகளிற்கு 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 61 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்டிருந்த ஹைதராபாத் அணியின் ரஷிட் கான் 17 ஓட்டங்களிற்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 176/3 (20) – மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 55*(28), டேவிட் வோர்னர் 43(40), சீக்கர் தவான் 30(29), டேனியல் கிரிஸ்டியன் 20/1(4)

ரைஸிங் புனே சூபர்ஜயன்ட் – 179/4 (20) – ராகுல் த்ரிபதி 59(41), மஹேந்திர சிங் தோனி 61*(34), ஸ்டீவ் ஸ்மித் 27(21), ரஷிட் கான் 17/1(4)

போட்டி முடிவு – ரைஸிங் புனே சூபர்ஜயன்ட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி


மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி டேர்டெவில்ஸ்

அபார பந்து வீச்சு ஆற்றலினை வெளிக்காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் இப்போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியினரை 14 ஓட்டங்களால் வீழ்த்தினர்.

மும்பையில் ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த மும்பை அணியின் வீரர்களில் ஜொஸ் பட்லர் (28) தவிர்ந்த ஏனைய வீரர்கள் மோசமான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்தனர்.

மத்திய வரிசையில் ஆடியிருந்த பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒரளவு சிறப்பாக செயற்பட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மும்பை அணி பெற்றுக்கொண்டது.

இதில், பொல்லார்ட் 26 ஓட்டங்களையும் பாண்டியா 24 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்து வீச்சில், கட்டுப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்த அமித் மிஷ்ரா மற்றும் அவுஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் ஆகியோர் டெல்லி அணிக்காக தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதனையடுத்து இலகு வெற்றி இலக்கான 143 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி அணி, தமது முதல் ஆறு விக்கெட்டுகளையும் 24 ஓட்டங்களை தாண்டுவதற்குள் மிச்சேல் மெக்லெனகன் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரின் அதிரடி பந்து வீச்சு காரணமாக பறிகொடுக்க அசாத்தியமான ஆரம்பத்தினை மும்பை அணி பெற்றுக் கொண்டது.

எனினும், ஏழாவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த தென்னாபிரிக்க வீரர்களான கிரிஸ் மொரிஸ் மற்றும் ககிஸோ றபடா ஆகியோர் சாமர்த்தியமான முறையில் துடுப்பாடி தமது அணியை பாரிய தோல்வியொன்றில் இருந்து மீட்க முயற்சித்ததுடன், இணைப்பாட்டமாக 91 ஓட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

எனினும், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி, 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினை தழுவிக் கொண்டது.

இதில், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த மொரிஸ் 41 பந்துகளிற்கு 52 ஓட்டங்களினையும் றபடா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் முடிவு மூலம் தமது தொடர்ச்சியான ஐந்தாவது வெற்றியினைப் பெற்று 2017 ஐ.பி.எல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணியின் பந்து வீச்சில், மிச்செல் மெக்லெனகன் 24 ஓட்டங்களிற்கு மூன்று விக்கெட்டுகளையும் ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தமது அணியின் வெற்றியினை பலப்படுத்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 142/8 (20) – ஜொஸ் பட்லர் 28(18), கிரோன் பொல்லார்ட் 26(29), ஹர்திக் பாண்டியா 24(23), அமித் மிஷ்ரா 18/2(4), பேட் கம்மின்ஸ் 20/2(4)

டெல்லி டேர்டெவில்ஸ் – 128/7 (20) – கிரிஸ் மொரிஸ் 52*(41), ககிஸோ றபடா 44(39), மிச்செல் மெக்லெனகன் 24/3 (4), ஜஸ்பிரிட் பும்ரா 21/2(4)

போட்டி முடிவு – மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றி