பஹ்ரைனின், கலீபா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட 2020 AFC சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றின் B குழுவுக்கான போட்டியில் இலங்கை அணியை துவம்சம் செய்த பலஸ்தீன அணி 9-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2018 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற தொடரில் கடைசி எட்டு அணிகளுக்குள் முன்னேறிய பலஸ்தீன அணி போட்டி ஆரம்பித்த விரைவிலேயே மூஸா பராவி பரிமாற்றிய பந்தை பெற்ற மஹ்மூத் அல்-இவிஸாத் மூலம் முதல் கோலை பெற்றது. மூன்று நிமிடங்களில் யூசப் எம்கமிஸ் சிறப்பாக கோல் ஒன்றை பெற்று அந்த அணியை 10 நிமிடங்களுக்குள்ளேயே 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.
பெனால்டி பெட்டிக்கு விளிம்பில் இலங்கை அணிக்கு அடுத்தடுத்து இரண்டு ப்ரீ கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதும் சுந்தராஜ் நிரேஷ் இலக்கை தவறவிட்டார்.
ஏன் முக்கிய வீரர்கள் 23 வயதின் கீழ் இலங்கை குழாமிலிருந்து நீக்கப்படனர்?
24 ஆவது நிமிடத்தில் பலஸ்தீன அணித்தலைவர் இப்ராஹிம் டப்பக் இலகுவாக கோல் ஒன்றை புகுத்தியதோடு இலங்கை பின்கள வீரர்களின் தடுமாற்றத்தை பயன்படுத்தி எம்கமிஸ் தனது இரண்டாவது கோலை புகுத்தினார்.
முதல் பாதி: பலஸ்தீன் 4 – 0 இலங்கை
பின்கள வீரர்களின் பலவீனம் ஒன்று இலங்கை அணிக்கு சாதகமாக மாறியதால் ரிப்கான் மொஹமட்டுக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. எனினும் அவரது உதையை பலஸ்தீன கோல்காப்பாளர் மெர் நஹ்பாவி சிறப்பாக தடுத்தார்.
போட்டி ஒரு மணி நேரத்தை எட்டும்போது தாவூத் ஈராக்கி வலது பக்க மேல் மூலையில் நீண்ட தூரத்தில் இருந்து மின்னல் வேகத்தில் உதைத்து கோல் ஒன்றை புகுத்தியதோடு, ரயீட் டல்ஹாவின் உதவியுடன் மாற்று வீரர் மஹ்மூத் சல்மா மற்றொரு கோலை புகுத்தினார்.
ஜூட் சுமன் 7 நிமிட இடைவெளியில் இரண்டு பெனால்டிகளை விட்டுக்கொடுக்க முறையே மூஸா பர்வி மற்றும் டெஹ்லா கோல்களை பெற்றனர்.
டப்பக்கின் கோல் முயற்சி ராசிக் ரஜசாத்தினால் தடுக்கப்பட கோல்காப்பாளரிடம் பட்டுச் சென்ற பந்தை சஆது அப்தஸ்ஸலாம் கோலாக மாற்றி பலஸ்தீன அணியின் கோல் மழையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
போட்டி முழுவதும் பந்தை பரிமாற்றி வாய்ப்புகளை பெறுவதற்கு இலங்கை வீரர்கள் முயற்சித்தபோதும் பலஸ்தீன வீரர்களின் அனுபவ ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போனது. அணித்தலைவர் ராசிக் ரிஷாத் எதிரணியின் கோல் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களுக்குச் செல்லாமல் அபாரமான முறையில் தடுத்ததே இலங்கை அணியின் ஆட்டத்தில் பிரகாசிக்கும் தருணங்களாக இருந்தன.
முழு நேரம்: பலஸ்தீன் 9 – 0 இலங்கை
கோல்பெற்றவர்கள்
பலஸ்தீன் – மஹ்மூத் அல்-இவிசாத் 7′, யூசப் எம்கமிஸ் 10′ & 30’, இப்ராஹிம் டபக் 24′, தாவூத் ஈராக்கி 60′, மஹ்மூத் சல்மா 68′, மூஸா பராவி 70′ (பெனால்டி), ரயீத் தஹ்லா 72′ (பெனால்டி), சஆது அப்தல்சலாம் 79′
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க