T20 சம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் நடக்குமா?

129
PTI

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் நடைபெற்று தொலைக்காட்சி உரிமப் பிரச்சினைகள் காரணமாக பின்னர் தடைப்பட்டுப் போன T20 சம்பியன்ஸ் லீக் தொடரினை மீள ஆரம்பிக்க முக்கிய கிரிக்கெட் புள்ளிகள் பலர் ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்திய வேகப் பந்துவீச்சு குழாத்தில் உள்ள மகிமை

அந்தவகையில், இந்த T20 சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரினை மீள நடாத்த வேண்டி இருப்பதன் அவசியம் பற்றி கருத்து வெளியிட்டிருக்கும் இங்கிலாந்தின் சர்ரேய் கிரிக்கெட் கழக நிறைவேற்று அதிகாரி றிச்சட் குட், T20 சம்பியன் சம்பியன் லீக் தொடரினை ஆரம்பிக்க இதுவே சிறந்த தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

”சம்பியன்ஸ் லீக் மீள ஆரம்பிக்கப்படுவதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.” 

”தற்போது கழக கிரிக்கெட்டுக்கும் உரிய வயது வந்துவிட்டது போலத் தெரிகின்றது. நீங்கள் இப்போது கால்பந்துக் கழகங்கள், ரக்பி கழகங்கள் போன்றவற்றுக்கு இருக்கும் சர்வதேச தொடர்களைப் பார்க்கின்றீர்கள். எனவே, (அவ்வாறான தொடர் ஒன்றை ஆரம்பிக்க) கிரிக்கெட் கழகங்களுக்கும் இதுவே சரியான நேரம் எனத் தோன்றுகின்றது.” 

இதேநேரம், ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளரான மனோஜ் படாலேயும், சம்பியன்ஸ் லீக் தொடரினை மீள ஆரம்பிக்க வேண்டி இருப்பதன் காரணத்தினை சுட்டிக்காட்டியிருந்தார். 

”சம்பியன்ஸ் லீக் தொடர்பான முக்கிய விடயம் என்னவெனில், குறித்த தொடர் (உலகில் இடம்பெறும்) ஏனைய சிறிய T20 தொடர்களினையும் தெளிவான குறிக்கோள் கொண்டதாக மாற்றுகின்றது. (இதனால்) குறித்த தொடர்களின் தரம் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமொன்று உருவாக்கப்படுகின்றது. ஆனால், (சம்பியன்ஸ் லீக்கினை மீள ஆரம்பிப்பதில்) சவாலாக இருப்பது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அட்டவணையாகும்.”     

என்னை சிறு பையன் என நினைக்க வேண்டாம்: நசீம் ஷா

மனோஜ் படாலே போன்ற ஐ.பி.எல். அணி உரிமையாளர்களின் ஆதரவு T20 சம்பியன்ஸ் லீக் தொடரினை மீள ஆரம்பிக்க பெரும் செல்வாக்குச் செலுத்தும் எனக் கருதப்படுகின்றது. 

ஏற்கனவே நடைபெற்ற T20 சம்பியன்ஸ் லீக் தொடரில் உலகின் சிறந்த T20 கழகங்களாக கருதப்படும் அணிகள் பங்கெடுத்திருந்தன. இது இவ்வாறிருக்க தற்போதைய நாட்களில் ஒவ்வொரு நாடுகளும் தமக்கென T20 கிரிக்கெட் தொடர்களை உருவாக்கி விளையாடி வருகின்றன. இதனால், சிறந்த T20 கழக அணிகள் உருவாகும் வாய்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.  எனவே, இனி வரும் காலங்களில் T20 சம்பியன்ஸ் லீக் ஆரம்பிக்கப்பட்டால் அது மிகவும் போட்டித்தன்மை கொண்ட ஒரு கிரிக்கெட் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை, ஐ.பி.எல். போட்டிகளினை முகாமைத்துவம் செய்த முன்னாள் உத்தியோகத்தர்களில் ஒருவரான சுந்தர் ராமனும் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டு, அதனை மீளக் கொண்டுவருவதற்கு செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்றார். 

ராஞ்சிக் கிண்ண தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர் மரணம்

”சம்பியன்ஸ் லீக் போட்டிகள் மீள வருவதற்கு ஆதரவு தருவபனாக நான் இருப்பேன்.” 

இன்னும் பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் அணிகளில் ஒன்றான முல்டான் சுல்டான் அணியின் இணை உரிமையாளர் அலி கான், பிக் பேஷ் லீக்கில் ஆடும் மெல்பர்ன் நகர அணிகளின் பொறுப்பாளர் நிக் கம்மின்ஸ், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஜேக்ஸ் போல் போன்றோரும் சம்பியன்ஸ் லீக் போட்டிகளை மீள ஆரம்பிக்க தங்களது ஆதரவினை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு உலகில் முக்கிய கிரிக்கெட் புள்ளிகளாக உள்ள பலரும் T20 சம்பியன்ஸ் லீக் தொடருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், T20 சம்பியன்ஸ் லீக் தொடரினை மீள நடாத்துவது தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க….