பங்களாதேஷ் அணிக்கு ஹதுருசிங்கவின் புதிய திட்டம்

143

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணிக்குள் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் தெளிவொன்றை பெற்றுக் கொள்ள விரும்புவதாக அந்த அணியின் புதிய பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் புதன்கிழமை (01) நடைபெறுகின்ற முதலாவது ஒருநாள் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சந்திக ஹதுருசிங்க பொறுப்பேற்ற நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஆரம்பமாவதற்கு முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பங்களாதேஷ் அணியில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதில் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான ஆயத்தம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

”இங்கிலாந்து அணி தான் ஒருநாள் போட்டிகளில் நடப்பு உலக சம்பியன். நியூசிலாந்து அணிக்கெதிரன டெஸ்ட் தொடரில் ஒரு அணியும், பங்களாதேஷ் தொடரில் இன்னுமொரு அணியும் விளையாடிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணியில் நம்பமுடியாத திறமையான வீரர்கள் உள்ளனர். நாம் எங்கே இருக்கிறோம், எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை அறிய விரும்புகிறோம். இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடினால், அது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும்” என தெரிவித்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதெிரான தொடருக்கான தயார்படுத்தல் குறித்து கருத்து தெரிவித்த சந்திக ஹதுருசிங்க,

”இந்த தொடருக்காக கடந்த சில நாட்களில் நாங்கள் சிறந்த முறையில் தயாராகிவிட்டோம் என்று நினைக்கிறேன். வீரர்கள் காட்டிய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நாங்கள் அதிகபட்ச ஆற்றலுடன் விளையாடவுள்ளோம். அதேபோல, இந்த தொடரில் விளையாடுவது இங்கிலாந்தின் சிறந்த அணி இல்லை என்று நினைக்கிறேன்.

ஆனால், இங்கிலாந்து அணியில் உலகின் தலை சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களை எதிர்கொள்வது இந்த தொடரில் எமக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் அணி கடைசியாக 2016ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் தொடரொன்றில் தோல்வியைத் தழுவியது. அந்த தொடரில் இங்கிலாந்திடம் தான் பங்களாதேஷ் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன்பிறகு, பங்களாதேஷ் தனது சொந்த மண்ணில் தொடர்ந்து ஏழு ஒருநாள் தொடர்களில் வென்றுள்ளது.

இதனிடையே, பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட வீரர்களான முஷ்பிசூர் ரஹ்மான், சகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் குறித்தும் ஹத்துருசிங்க கருத்து தெரிவித்தார். அதில் சகிப்புக்கும், தமீமுக்கும் இடையேயான விரிசல் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

“எனது தொழிலை ஆரம்பித்து ஏழு நாட்கள் ஆகிறது. நான் இங்குள்ள மைதானங்களில் இருந்திருக்கிறேன். சில இடங்களில் அனைத்து வீரர்களும் ஒன்றாக இருக்க மாட்டார்கள். ஆனால், களத்தில் இறங்கும் போது ஓர் அணியாக விளையாடுவார்கள். இரவு உணவிற்குச் செல்ல நீங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை. இது அணியை பாதிக்காத வரை, நான் அதை ஒரு பிரச்சனையாக பார்க்க மாட்டேன்“ என தெரிவித்தார்.

அதேபோல தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லாஹ், லிட்டன் தாஸ், மெஹெதி ஹசன் மிராஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் ஹத்துருசிங்க மேலும் தெரிவித்ததுடன், தற்போது பங்களாதேஷ் அணி அடுத்த தலைமுறையை இலக்காகக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<