ஆசிய விளையாட்டு விழா ரக்பி போட்டிகளில் இலங்கை நான்காம் இடம்

52

ஆசிய விளையாட்டு விழா ரக்பி போட்டிகளில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் கொரிய அணியிடம் 36-14 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்ற இலங்கை அணி 4 ஆவது இடத்தை தக்கவைத்துக்கொண்டது. அரையிறுதியில் பிரபல ஜப்பான் அணியுடன் வெறும் 2 புள்ளிகளால் இலங்கை அணி தோல்வியுற்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை எதிர் கொரியா

ஏற்கனவே குழு மட்ட போட்டியில் கொரிய அணியுடன் தோல்வியுற்ற இலங்கை அணி, இப்போட்டியில் வெற்றிபெற்று இலங்கைக்கு இவ்வருட ஆசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை பெற்றுத்தரும் எண்ணத்தில் போட்டியில் களம் இறங்கியது. எனினும் இலங்கையின் கனவை கலைக்கும் வகையில் கொரிய அணி ஆரம்பம் முதலே புள்ளிகளைப் பெற்று அசத்தியது. முதல் பாதியில் தொடர்ந்து 3 ட்ரைகளை வைத்த கொரிய அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. இலங்கை அணியினால் முதல் பாதியில் எந்த ஒரு புள்ளியையும் பெற முடியவில்லை

முதல் பாதி: தென் கொரியா 19 – 00 இலங்கை

இரண்டாம் பாதியின் முதல் நிமிடத்திலேயே இலங்கை அணி தரிந்த ரத்வத்த மூலமாக ட்ரை வைத்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்ததது. இருந்தாலும் கொரிய அணி மேலும் மூன்று முறை தொடர்ந்து ட்ரைகளை வைத்து இலங்கையின் பதக்க கனவை கலைத்தது. ஜேசன் திஸாநாயக்க இலங்கை சார்பாக இறுதி நிமிடத்தில் ஆறுதல் ட்ரை ஒன்றை வைத்தார்.

தென் கொரிய அணியிடம் வீழ்ந்த இலங்கை ரக்பி அணி

முழு நேரம்: தென் கொரியா 36(6T, 3C ) – 14(2T, 2C )

புள்ளிகள் பெற்றோர்

தரிந்த ரத்வத்த 1T 2C, ஜேசன் திஸாநாயக்க 1T


இலங்கை எதிர் ஜப்பான்

அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆசிய ஜாம்பவானான ஜப்பான் அணியை சந்தித்தது. போட்டியின் முன்னர் ஜப்பான் அணி இலகுவாக வெற்றி பெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பொழுதும், இலங்கை அணி அனைவரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும்வாறு சிறப்பாக விளையாடி ஜப்பான் அணிக்கு கடும் அழுத்தம் வழங்கியது.

விறுவிறுப்பான போட்டியின் பின்னர் 12-10 என வெறும் இரண்டு புள்ளிகளால் ஜப்பான் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி கவிந்து பெரேராவின் வேகத்தின் மூலம் முதலாவது ட்ரை வைத்து அசத்தியது. எனினும் கொன்வெர்சன் தவறவிடப்பட்டது. எனினும் சில நிமிடங்களின் பின்னர் ஜப்பான் அணியும் ட்ரை வைத்து புள்ளிகளை சமநிலை செய்தது. எனினும் விட்டுக்கொடுக்காத இலங்கை அணி முதல் பாதி நிறைவடைய முன்னர் சுதர்ஷன முததந்திரி மூலமாக மற்றுமொரு ட்ரை வைத்தது. பிரபல ஜப்பான் அணி மற்றுமொரு ட்ரை வைக்க, முதல் பாதியின் முன்னிலை ஜப்பான் அணிக்கே கிடைத்தது.

முதற் பாதி: இலங்கை 10 – 12 ஜப்பான்

ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க

இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் சிறப்பாகவும், சமமாகவும் மோதிக்கொண்டன. இலங்கை அணி, ஜப்பானிற்கு எதிராக சிறப்பான சவாலை வெளிக்காட்டியது. எனினும் இரு அணிகளாலும் இரண்டாம் பாதியில் எந்த ஒரு ட்ரையையும் பெற முடியவில்லை. இறுதி நிமிடத்தில் புத்திம ப்ரியரத்ன பந்தை நழுவ விட்டதுடன் போட்டி நிறைவடைந்தது.

முழு நேரம்: இலங்கை 10 (2T ) – 12 (2T 2C ) ஜப்பான்

பிரபல ஜப்பான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியதன் மூலம் இலங்கை ரக்பி அணியின் எதிர்காலத்தின் மீது அதீத நம்பிக்கை அனைவரிடமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<