உலகக் கிண்ண ஆரம்ப விழா தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

ICC Men's Cricket World Cup 2023

305

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆரம்ப விழா அஹமதாபாத்தில் இன்று (04) இரவு 7.00 மணிக்கு நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஆரம்ப விழாவை ரத்து செய்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை (BCCI) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் நாளை (05) ஆரம்பமாகவுள்ளது. நவம்பர் 19ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் அணியான இங்கிலாந்தும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. 

இந்த நிலையில், உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகுவதை முன்னிட்டு பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்ப விழா இன்று (04) அஹமதாபாத் நரோந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்தனர். இரவு 7.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிப்பு வெளியானது. 

அத்துடன், இந்தியாவின் முன்னணி பாடகர்களான ஆஷா போஸ்லே, சங்கர் மகாதேவன், அர்ஜித் சிங், ஷ்ரேயா கோஷல் ஆகியோரும் இந்த கலை நிகழ்ச்சிகளில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆரம்ப விழாவின் முக்கிய அம்சமாக 10 அணிகளின் தலைவர்கள் பங்கேற்கும் அறிமுக நிகழ்ச்சியும் இடம்பெறிவிருந்தது 

இதற்கான தனியாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை என்றும், நாளை நடைபெறவுள்ள இங்கிலாந்துநியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் போட்டிக்கான டிக்கெட்டை எடுத்திருப்பவர்கள் ஆரம்ப விழாவை மைதானம் வந்து பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ஆரம்ப விழாவை BCCI ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த திடீர் தீர்மானத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. 

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் ஆரம்ப விழா நடைபெறாதது இதுவே முதல்முறை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

எவ்வாறாயினும், ஆரம்ப விழாவிற்குப் பதிலாக இந்தியாபாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டிக்கு முன்னதாக ஒரு நிகழ்ச்சியையும், உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டியின் போது ஒரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு BCCI திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதேவேளை, இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா உள்ளிட்ட 10 அணிகளின் தலைவர்களும் பங்கேற்கும் தலைவர்கள் தினம் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று இரவு நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<