ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க

2168

செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இலங்கை அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (1) அறிவித்துள்ளது.

ஒரு நாள் தொடராக இடம்பெறவுள்ள இந்த ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இடம் பிடித்துள்ளார்.

கடைசியாக 2017 ஆம் ஆண்டிலேயே இலங்கை அணிக்காக சர்வதேச போட்டியொன்றில் விளையாடிய லசித் மாலிங்க பின்னர் முழங்கால் உபாதை மற்றும் போதிய உடற்தகுதியின்மை போன்ற காரணங்களினால், இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார். எனினும், மாலிங்கவின் மீள் வருகையினால் ஆசியக் கிண்ணத்தில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறை பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிய கிண்ணத்தில் கோஹ்லிக்கு ஓய்வு; இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா

மாலிங்கவுடன் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியினை தாமதம் செய்த குற்றச்சாட்டில் ஆறு சர்வதேச போட்டிகளில் ஐ.சி.சி இனால் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்ட முன்வரிசை துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமாலும் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருக்கின்றார்.

சந்திமால் போன்று ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ஆறு சர்வதேச போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் சபை தடை விதித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்கவும் இலங்கை அணிக்கு ஆசிய கிண்ணத் தொடர் மூலம் திரும்பியிருக்கின்றார்.

இவர்களோடு சுழல்பந்து சகலதுறை வீரர் தில்ருவான் பெரேரா, காயத்தில் இருந்து மீண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம், அண்மைய தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்த நிரோஷன் திக்வெல்ல, ஷெஹான் ஜயசூரிய, லஹிரு குமார (காயம்), லக்ஷான் சந்தகன் மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை குழாமில் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தில் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம் – அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணத்திலக்க, திசர பெரேரா, தசுன் சானக்க, தனசஞய டி சில்வா, அகில தனஞ்சய, தில்ருவான் பெரேரா, அமில அபொன்சோ, கசுன் ராஜித, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க.

மேலதிக வீரர்கள் – நிரோஷன் திக்வெல்ல, ஷெஹான் மதுஷங்க, லக்ஷான் சந்தகன், நுவன் பிரதீப், ஷெஹான் ஜயசூரிய

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<