ஆபித், ரிஸ்வானின் சதங்கள் வீண்; 6 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா த்ரில் வெற்றி

87
Image Courtesy - ICC

பாகிஸ்தானுக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 6 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4 – 0 என கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இந்தப்போட்டியில் பாகிஸ்தான் சார்பாக அறிமுக வீரர் ஆபித் அலி மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் சதமடித்து அசத்தினாலும், அவுஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சினால் 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில்…

இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 22 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகளிலும் அபார வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரை 3 – 0 என கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டி டுபாயில் நேற்று (29) பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் இமாத் வசீம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக 31 வயதான ஆபித் அலி அறிமுக வீரராக களமிறங்கினார்.

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ஞ்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் அதிரடியாக தமது இன்னிங்ஸை ஆரம்பிக்க அவ்வணியின் ஓட்ட எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது அவ்வணியின் முதலாவது விக்கெட்டாக ஆரோன் பின்ஞ்ச் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ஷோன் மார்ஷ் (5) பீட்டர் ஹேன்ஸ்கோம்ப் (7) மார்கஸ் ஸ்டாய்னிஸ் (2) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுபுறத்தில் உஸ்மான் கவாஜா தனது 9 ஆவது அரைச்தத்தை பெற்று 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த அவ்வணி ஒரு கட்டத்தில் 140 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நிலையில் கிளென் மெக்ஸ்வெல் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டது.  

இருவரும் இணைந்து 6 ஆவது விக்கெட்டுக்காக 134 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கிளென் மெக்ஸ்வெல் 98 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்க, அலெக்ஸ் கேரி 55 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் கிளென் மெக்ஸ்வெல் 82 பந்தில் 98 ஓட்டங்களை (9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்து சதம் பெறும் வாய்ப்பை 2 ஓட்டங்களால் தவறவிட்டார அலெக்ஸ் கேரி 55 ஓட்டங்ளையும், உஸ்மான் கவாஜா 62 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக, மொஹமட் ஹஸ்னைன், இமாத் வசீம் மற்றும் யாசிர் ஷாஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

இந்த நிலையில் 278 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் (0) ஏமாற்றினார். ஹரிஸ் சொஹைல் (25) நிலைக்கவில்லை. எனினும், 3 ஆவது விக்கெடடுக்காக ஜோடி சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் மற்றும் அறிமுக வீரர் ஆபித் அலி ஆகியோர் 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று நம்பிக்கை அளித்தனர்.

உலகக் கிண்ணத்திற்காக பாகிஸ்தான் தொடரில் ஆர்ச்சரை ஒத்திகை பார்க்கவுள்ள இங்கிலாந்து

மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாக கொண்ட, இளம் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக்…

எனினும், அடெம் சம்பாவின் சுழலில் ஆபித் அலி 112 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியமால் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 6 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலிய அணி தரப்பில் நெதன் கோல்டர் நைல் 3 விக்கெட்டுக்களையும், மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். அவுஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 4 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (31) டுபாயில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 277/7 (50) – கிளென் மெக்ஸ்வெல் 98, உஸ்மான் கவாஜா 62, அலெக்ஸ் கேரி 55, ஆரோன் பின்ஞ்ச் 39, மொஹமட் ஹஸ்னைன் 2/52, இமாத் வசீம் 2/56, யாசிர் ஷாஹ் 2/57

பாகிஸ்தான் – 271/8 (50) – ஆபித் அலி 112, மொஹமட் ரிஸ்வான் 104, ஹரிஸ் சொஹைல் 25, நெதன் கோல்டர் நைல் 3/53, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2/20,

முடிவு  – அவுஸ்திரேலிய அணி 6 ஓட்டங்களால் வெற்றி

 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<