சதத்தினை தவறவிட்ட சந்திரகுப்தா : 2ஆம் நாளில் மீண்ட இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி

2416
SL Board XI vs England Lions

மொரட்டுவ மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியின், இன்றைய இரண்டாம் நாளில் இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி தமது சிறப்பான துடுப்பாட்டத்தின் துணையுடன் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இங்கிலாந்து லயன்ஸ்

168 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இரண்டாவது நாளான இன்றைய ஆட்டத்தினை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி ஓட்டங்களை நிதானமான முறையில் சேர்க்க ஆரம்பித்திருந்தது. நேற்று அரைச் சதம் கடந்திருந்த லிவிங்ஸ்டன், வெஸ்லி ஆகியோர் 5ஆவது விக்கெட்டின் இணைப்பாட்டமாக 136  ஓட்டங்களை அணிக்காக  பகிர்ந்தனர்.

பின்னர் 5ஆவது விக்கெட்டாக பறிபோன லியாம் லிவிங்ஸ்டன் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 84 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனையடுத்து தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்த அவ்வணி, மேலதிக சொற்ப ஓட்டங்களை குவித்திருந்த தருணத்தில், சதத்தினை நெருங்கி கொண்டிருந்த டொம் வெஸ்லி, நிசல தாரக்கவின் வேகத்தினை தாக்குப் பிடிக்காமல் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இரு வீரர்களினதும் விக்கெட்டுக்களை தொடர்ந்து புதிதாக வந்த வீரர்கள் எவரும் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் ஜொலிக்காத காரணத்தினால், அவ்வணியானது 69.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக் கொண்டது.

இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணியின் பந்து வீச்சில், சிலாபம் மேரியன்ஸ் அணியின் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுக்களை சாய்த்ததோடு, மறுமுனையில் தேசிய அணி வீரர் தரிந்து கெளசால், நிசால தாரக்க மற்றும் விமுக்தி பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டனர்.

பின்னர், 126 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை தொடங்கிய இலங்கை தரப்பு, போட்டியின் மூன்றாவது ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் துமிந்துவின் விக்கெட்டை ஓட்டம் எதுவும் பெறாமல் பறிகொடுத்தது.

எனினும் நிலைமையை சுதாரித்துக் கொண்ட புதிய துடுப்பாட்ட வீரரான இரோஷ் சமரசூரிய மற்றும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோன் சந்திரகுப்தா ஆகியோர் நிதானமான முறையில் ஓட்டங்களினை குவித்து ஜனாதிபதி அணியினை வலுப்படுத்தினர்.

இரண்டாவது விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர உதவியிருந்த சமசூரிய 42 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழந்தார். இதனையடுத்து, தமது துடுப்பாட்டத்தினை முன்னெடுத்த ஜனாதிபதி அணி, ரொன் குப்தா 14 பவுண்டரிகளை விளாசி பெற்றுக்கொண்ட 91 ஓட்டங்களின் துணையுடன் போட்டியின் இன்றைய ஆட்ட நேர நிறைவின்போது 57 ஓவர்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களினை குவித்து இங்கிலாந்து லயன்ஸ் அணியினை விட 56 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி  (முதல் இன்னிங்ஸ்): 153 (53.3) – ரொன் சந்திரகுப்தா 48, டிலான் ஜயலத் 26, தரிந்து கெளஷால் 18*, தோமஸ் ஹெல்ம் 3/18, டொம் குர்ரன் 2/23, கிரைக் ஓவர்டன் 2/31

இங்கிலாந்து லயன்ஸ் அணி(முதல் இன்னிங்ஸ்): 279 (69.1) டொம் வெஸ்லி 95, லியாம் லிவிங்ஸ்ட்ன் 84, மலிந்த புஷ்பகுமார 82/3

இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 182/4 (57) ரொன் சந்திரகுப்தா 91, இரோஷ் சமரசூரிய 42, லியோ பிரான்சிஸ்கோ 32*, டொபி ரோலான்ட்ஜோன்ஸ் 10/1

போட்டியின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்