இங்கிலாந்து இளைஞர் அணியின் ஆதிக்கத்தைத் தாக்குப் பிடிக்குமா இலங்கை இளைஞர் அணி?

204
sl v eng youth cricket

இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கை இளைஞர் அணிக்கும், இங்கிலாந்து இளைஞர் அணிக்கும் இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்தது. தனது முதல் இனிங்ஸிற்காக 500 எனும் பிரமாண்டமான ஓட்டத்துடன் இங்கிலாந்து இளைஞர் அணி ஆட்டத்தை நிறுத்திக்கொள்ள இலங்கை அணி நேற்று தனது முதல் இனிங்ஸை ஆரம்பித்தது. 3ஆம் நாளில் 96 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 3ஆம் நாள் முடிவின்போது 235 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து காணப்படுகிறது.

இரண்டாம் நாள் முடிவில் ஆட்டம் இழக்காமல் காணப்பட்ட தலைவர் சரித் அசலங்க மற்றும் பெர்னாண்டோ மூன்றாம் நாள் ஆட்டத்தை  ஆரம்பித்தனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 79 ஓட்டங்களை இணைப்பாகப் பெற்றது.

தனது பொறுப்பை சரிவர நிறைவேற்றித் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தலைவர் சரித் அசலங்க, இலங்கை இளைஞர் அணி ஒரு சிறந்த ஓட்ட எண்ணிக்கையைக் குவிக்க உதவினார்.

எனினும் பார்ன்ஸின் பந்து வீச்சிற்கு பார்ட்லெட்டிடம் பிடி கொடுத்து 81 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சரித்  அசலங்க ஆட்டமிழந்தார். இவர் 128 பந்துகளுக்கு முகம் கொடுத்து 12 நான்கு ஓட்டங்களுடன் 81 ஓட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

sl v eng youth cricketதலைவர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து உப தலைவர் சம்மு அஷான் துடுப்பெடுத்தாட களமிறங்கினார்.

எதிர்பார்த்தது போலவே சிறப்பாக விளையாடிய அஷான், பெர்னாண்டோவுடன் சேர்ந்து ஒரு சிறந்த இணைப்பை நிதானமாக நிலை நாட்டினார்.

எனினும் 58 ஆவது ஓவரில் பெர்னாண்டோ 45 ஓட்டங்களைப் பெற்ற  நிலையில் கோப்லினின் பந்துவீச்சிற்கு ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அஷான் தனது அரைச் சதத்தைக் கடந்தார். சிறப்பாக ஓட்டங்களைக் குவித்துக்கொண்டிருந்த அஷான் 51 ஓட்டங்களைப் பெற்ற  நிலையில் விர்டியின் பந்து வீச்சிற்கு ஆட்டமிழந்து இலங்கை அணியை 223/6 என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்.

77ஆவது ஓவரிலேயே 228 ஓட்டங்கள் பெற்று இருந்த நேரம் நிர்மலும் வெறும் 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு நம்பிக்கையாக பண்டார மற்றும் டேனியல்  நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர். ஆட்ட நேர முடிவின் பொழுது பண்டார 21 ஓட்டங்களுடனும், டேனியல் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் காணப்படுகின்றனர்.

நேற்று மழை காரணமாக வெறும் 43 ஓவர்களே விளையாடப்பட்டது. மழையின் காரணமாக ஒரு சிறந்த கிரிக்கெட் போட்டியை ரசிக்க முடியாமல் போனாலும் இலங்கை இளைஞர் அணிக்கு மழை சாதகமாகவே அமைந்தது. மழையின் காரணமாக இன்னும் முதல் இனிங்ஸை இலங்கை இளைஞர் அணி துடுப்பெடுத்தாடி வருவதால் தமது மோசமான விளையாட்டின் காரணமாக ஏற்பட இருந்த தோல்வியைத் தவிர்த்து வெற்றி தோல்வி இன்றி போட்டியை முடித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இலங்கை இளைஞர் அணிக்குக் கிடைத்துள்ளது.

இலங்கை இளைஞர் அணி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி போட்டியை சமநிலையில் முடிக்குமா, இல்லை இங்கிலாந்து இளைஞர் அணி விரைவாக விக்கட்டுகளைக் கைப்பற்றி போட்டியை  வெல்லுமா என்பது போட்டியின் நான்காவது நாளான இன்று தெரிந்துகொள்ள முடியும்

இங்கிலாந்து இளைஞர் அணி (முதல் இனிங்ஸ்) 500/9d (131) – வெஸ்ட்பரி 196, பார்ட்லட் 131, போப் 78

லஹிரு குமார 2/104, டேனியல் 3/91

இலங்கைஇளைஞர்அணி 235/6(80) – சரித் அசலங்க 81, சம்மு அஷான் 51, பெர்னாண்டோ 45

விரடி 2/57, கோப்லின் 2/19