மேற்கிந்திய தீவுகளை போராடி வீழ்த்தியது இலங்கை A அணி

1114

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் குறைந்த இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை A அணி 2 விக்கெட்டுகளால் பரபரப்பு வெற்றியைப் பெற்றது.  

இந்த வெற்றியின்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது. இலங்கை A அணி ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியமை நினைவுகூறத்தக்கது.   

மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை A அணி

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான மூன்றா…

இந்நிலையில், ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவை நெருங்கும்போது, பகலிரவுப் போட்டியாக ஆரம்பமான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் A அணி ஆரம்பத்தில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களை பெற்றது. எனினும் இந்த ஓட்டங்களை பெற மேற்கிந்திய தீவுகள் அணி 15 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.

எனினும் அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் A அணியின் விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக பறிபோக ஆரம்பித்தன. அவ்வணி ஒரு சந்தர்ப்பத்தில் 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் அந்த அணி எஞ்சிய எட்டு விக்கெட்டுகளையும் வெறுமனே 71 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் A அணி 48.4 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கே சுருண்டது.  

ஆரம்ப வீரர் மொன்ட்சின் ஹொட்ஜ் மாத்திரம் நிதானமாக ஆடி 54 ஓட்டங்களை பெற்றார். பின்னிலை மத்திய வரிசை வீரராக வந்த ரஹ்கீன் கோர்ன்வோல் 37 ஓட்டங்களை குவித்தார். வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களைக்கூட எட்டவில்லை.

இலங்கை சார்பில் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அமில அபொன்சோ ஆகியோர் முறையே 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தவிர சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒன்பது ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆரம்ப வீரராக வந்த சதுன் வீரக்கொடி 7 ஓட்டங்களுடன் ஆட்டமிந்தார். பின்னர் ரொஷேன் சில்வா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் தனன்ஜய டி சில்வாவினால் 12 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ஹேரத், அசேலவுக்கு அதிக கௌரவம்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இவ்வருட இறுதியில் நிரந்த…

இதன்படி இலங்கை அணி 95 ஓட்டங்களை பெறும்போது 5 விக்கெட்டுகளை இழந்ததோடு 149 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடியை சந்தித்தது. இந்நிலையில் விருந்தினருக்கு போட்டியை வெற்றி பெற 2 விக்கெட்டுகள் மாத்திரம் கைவசம் இருக்க மேலும் 28 ஓட்டங்களை எடுக்க வேண்டி இருந்தது.  

எனினும் களத்தில் இருந்த ஷெஹான் ஜயசூரிய பெறுப்புடன் ஆடி இலங்கை A அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். இலங்கை தரப்பு 48 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஜயசூரிய ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்றார். முன்னதாக மத்திய வரிசையில் வந்த சரித் அசலங்க 33 ஓட்டங்களை எடுத்து அணிக்கு கைகொடுத்தார். கடைசி வரிசையில் தனது விக்கெட்டை காத்துக் கொண்ட அமில அபொன்சோ ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களைப் பெற்றார்.

மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் கொட்ரெல் 44 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டி நாளை இதே சபீனா பார்க் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் A அணி – 176 (48.4) – மொன்ட்சின் ஹொட்ஜ் 54, ரஹ்கீன் கோர்ன்வோல் 37, லஹிரு குமார 26/3, அமில அபொன்சோ 34/3, மலிந்த புஷ்பகுமார 35/2, சாமிக்க கருணாரத்ன 36/2

இலங்கை A அணி – 181/8 (48) – ஷெஹான் ஜயசூரிய 31*, சரித் அசலங்க 33, அமில அபொன்சோ 16*, ஷெல்டன் கொட்ரெல் 44/4

முடிவு: இலங்கை A அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி