ப்ரீமியர் லீக் கழகங்களில் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

49

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் போட்டிகளை வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடாகி வரும் நிலையில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் அந்தக் கழகங்களில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.    

பெயர் வெளியிடப்படாத நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தற்போது ஏழு நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்

கொரோனாவின் பின் கால்பந்து போட்டிகள் இப்படித்தான் இருக்கும்

19 கழகங்களின் மொத்தம் 748 வீரர்கள் மற்றும் பணியாளர்கள் மீதே வைரஸ் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏஞ்சிய கழகங்கள் தமது சோதனையை செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்டன.  

இந்நிலையில் ப்ரீமியர் லீக் குழாம்கள் செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இன்றி பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன

கொவிட்-19 வைரஸ் தொற்றுக் காரணமாக ப்ரீமியர் லீக் போட்டிகள் கடந்த மார்ச் 13 ஆம் திகதி தொடக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் மேலும் 92 போட்டிகள் எஞ்சியுள்ளன.  

போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்கும் சாத்தியமான திகதியாக எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தத் திகதி மேலும் பிற்போடப்பட சாத்தியம் உறுவாகியுள்ளது.  

போட்டியின் ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத் தன்மையை நோக்காகக் கொண்டே இந்தத் தகவலை ப்ரீமியர் லீக் வழங்குகிறது. கழகங்கள் மற்றும் தனிநபர்கள் போன்ற குறிப்பிட்ட விபரங்கள் வழங்கப்பட மாட்டாது என்பதோடு ஒவ்வொரு சுற்று சோதனைகளுக்குப் பின்னரும் இந்த வகையில் முடிவுகள் வெளியிடப்படும் என்று ப்ரீமியர் லீக் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

தலா 40 நபர்கள் வரை சோதனை செய்வதற்கு கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதோடு இதில் சில கழகங்கள் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையை இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்பதோடு சில மாதிரிகள் இன்னும் சோதனை நடைமுறையில் உள்ளன

போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு இங்கிலாந்தின் முன்னணி கழகங்கள் இணங்கின.  

இதன் முதல் கட்டமாக ஐந்துக்கு மேற்படாத குழுவுக்கு ஒவ்வொரு வீரருக்கும் தலா 75 நிமிடங்களுக்கு மேற்படாத நேரம் பயிற்சி அளிக்கப்படுவதோடு, சமூக விலகல் கட்டாயம் பின்பற்றப்படுகிறது

இது தொடர்பில் வீரர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ நெறிமுறை வழிகாட்டலில், ஒவ்வொரு பயிற்சி நேரமும் முடிந்த பின் கோனர் கம்பங்கள், பந்துகள், பிளாஸ்டிக் கூம்புகள், கோல்கம்பங்கள் மற்றும் மைதானங்கள் அனைத்தும் கிரிமிநீக்கி மூலம் சுத்தப்படுத்த விதிக்கப்பட்டுள்ளது.  

Embed –  https://www.thepapare.com/messi-top-maradona-another-world-cannavaro-greatest-debate-tamil/ 

தற்போதைய நடைமுறையில் வாரத்திற்கு இருமுறை வைரஸ் சோதனை மேற்கொள்ளவும், நாளாந்தம் பயிற்சிக்கு முன்னர் வினாப்பட்டியலை பெற மற்றும் உடல் வெப்பநிலையை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் முடக்க நிலைக்குப் பின்னர் ஐரோப்பாவின் முதலாவது பிரதான கால்பந்து தொடராக ஜெர்மனி புன்டஸ்லிகா போட்டிகள் மூடிய அரங்குகளில் கடந்த சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமானது.  

தனிமைப் பயிற்சி தொடக்கம் போட்டிகள் ஆரம்பிப்பது வரை புன்டஸ்லிகா தொடருக்கு சுமார் ஐந்து வாரங்கள் எடுத்துக்கொண்டன. இதன்படி ப்ரீமியர் லீக்கிற்கான ஏற்பாடுகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் போட்டிகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கான சாத்தியமான திகதிகளாக வரும் ஜூன் 19 அல்லது 26 உள்ளது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<