பொதுநலவாய மகளிர் கிரிக்கெட்: ‘பி’ குழுவில் இலங்கை

99

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள மகளிருக்கான T20 கிரிக்கெட்டில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ‘B’ குழுவில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா ஜூலை 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் மகளிருக்கான கிரிக்கெட் முதல்முறையாக அறிமுகமாகிறது.

இதன்மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுநலவாய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டி (T20) இடம்பெறவுள்ளது. இதற்கு முன் 1998இல் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருந்தது. இதில் ஷோன் பொல்லக் தலைமையிலான தென்னாபிரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஸ்டீவ் வோ தலைமையிலான அவுஸ்திரேலிய வெள்ளிப் பதக்கத்தையும் ஸ்டீவன் பிலெமிங் தலைமையிலான நியூஸிலாந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இதனிடையே, இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் சேர்க்கப்பட்டுள்ள மகளிருக்கான T20 கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா உட்பட 7 அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றிருந்தன.

இந்த நிலையில், 8ஆவது அணியைத் தீர்மானிக்கின்ற தகுதிச்சுற்றுப் போட்டி கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்றதுடன், இதில் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி சம்பியன் பட்டத்தை வென்று தனக்கான இடத்தை உறுதி செய்து கடைசி அணியாக இணைந்துகொண்டது.

எனவே, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் இணைப்புக்கு பொதுநலவாய விளையாட்டு சம்மேளனம் அங்கீகாரம் அளித்ததை அடுத்து, 8 அணிகளின் இணைப்பு பூர்த்தியாகியது. இதனையடுத்து குழுநிலைப்படுத்தல் அறிவிப்பு நேற்று (01) உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குழுநிலைப்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவையும், பொதுநலவாய விளையாட்டுத்துறை சம்மேளனமும் கூட்டாக அறிவித்தன.

இதில் 8 அணிகளும் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதியில் (ஆகஸ்ட் 6) விளையாடும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஆகஸ்ட் 7ஆம் திகதி நடைபெறுகின்ற இறுதிப்போட்டியில் மோதும்.

‘A’ பிரிவில் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படோஸ் ஆகிய அணிகளும், ‘B’ பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை ஜூலை 30ஆம் திகதி சந்திக்கிறது. அதன்பின் நியூசிலாந்து (ஆகஸ்ட் 2), தென்னாபிரிக்கா (ஆகஸ்ட் 4) அணிகளை எதிர்கொள்கிறது.

இதேவேளை, பொதுநலவாய விளையாட்டு விழா மகளிர் கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்ற இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை, பொதுநலவாய விளையாட்டுத்துறை சம்மேளனம், இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சம்மேளனம் ஆகியன பாராட்டுகளை தெரிவித்திருந்தன.

இதுதொடர்பில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தப்பத்து கருத்து தெரிவிக்கையில்,

பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்றமை மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது. பல்வகை விளையாட்டுக்களை உள்ளடக்கிய விழாவில் பங்குபற்றுவது எம் அனைவரையும் பூரிப்பில் ஆழ்த்துகின்றது. இது எங்கள் அனைவருக்கும் வித்தியாசமான அனுபவமாக அமையும்” என தெரிவித்தார்.

போட்டி அட்டவணை (லீக் ஆட்டங்கள்)

ஜூலை 29: அவுஸ்திரேலியா – இந்தியா

ஜூலை 29: பாகிஸ்தான் – பார்படோஸ்

ஜூலை 30: நியூசிலாந்து – தென்னாபிரிக்கா

ஜூலை 30: இங்கிலாந்து – இலங்கை

ஜூலை 31: இந்தியா – பாகிஸ்தான்

ஜூலை 31: பார்படோஸ் – அவுஸ்திரேலியா

ஆகஸ்ட் 2: இங்கிலாந்து – தென்னாபிரிக்கா

ஆகஸ்ட் 2: இலங்கை – நியூசிலாந்து

ஆகஸ்ட் 3: அவுஸ்திரேலியா – பாகிஸ்தான்

ஆகஸ்ட் 3: இந்தியா – பார்படோஸ்

ஆகஸ்ட் 4: தென்னாபிரிக்கா – இலங்கை

ஆகஸ்ட் 4: இங்கிலாந்து – நியூசிலாந்து

நொக்அவுட் சுற்றுப் போட்டிகள்

ஆகஸ்ட் 6: முதலாவது அரை இறுதிப்போட்டி

ஆகஸ்ட் 6: 2ஆவது அரை இறுதிப்போட்டி

ஆகஸ்ட் 7: இறுதிப்போட்டி

ஆகஸ்ட் 7: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<