கோலூன்றிப் பாய்தலில் கயானண் சாதனை; ரிபாய், ஜனுஸ்கருக்கு 2ஆவது பதக்கம்

Sir John Tarbat Senior Athletics Championship 2022

158

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த 90ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் வெள்ளிக்கிழமை (16) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இம்முறை சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 12 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் ஏழு போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் நான்கு போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டதுடன். ஒரு போட்டிச் சாதனை சமப்படுத்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கோலூன்றிப் பாய்தலில் சொபிசன், சுவர்ணாவுக்கு தங்கம்

இதனிடையே, இம்முறை போட்டிகளில் ஆண்டின் அதிசிறந்த வீரராக மதுகம ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரியைச் சேர்ந்த இசுரு கௌஷல்ய பென்ஸும், அதிசிறந்த வீராங்கனையாக பிபில நன்னாபூறுவ மத்திய மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத்தும் தெரிவாகினர்.

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற போட்டிகளில் வடக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

சாவகச்சேரி இந்துவுக்கு ஹெட்ரிக் தங்கம்

16 வயதின் கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த சுமித்திரன் கயாணன் 3.60 மீட்டர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

முன்னதாக, 16 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த பரந்தாமன் அபிலாஷினி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், 22 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அதே கல்லூரியைச் சேர்ந்த நேசராசா டக்சிதா தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிபாய்க்கு 2 பதக்கங்கள்

16 வயதின் கீழ் ஆண்களுக்கான 100 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் கண்டி திருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த எம்.ஏ ரிபாய் தங்கப் பதக்கத்தை வென்றார். போட்டியை நிறைவு செய்ய அவர் 14.01 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். இம்முறை சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் அவரது 2ஆவது பதக்கம் இதுவாகும்.

முன்னதாக, நேற்று நடைபெற்ற 16 வயதின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியிலும் ரிபாய் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அதே போட்டியில் பங்குபற்றிய நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியைச் சேர்ந்த டி. சுஜீவன் (14.17 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கோலூன்றிப் பாய்தலில் டக்சிதாவுக்கு தங்கம்; துதிஹர்ஷிதன், அப்பாத்துக்கு முதல் பதக்கம்

ஜனுஸ்கரின் 2ஆவது பதக்கம்

22 வயதின்கீழ் ஆண்களுக்கான 1500 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் வை. ஜனுஸ்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை அவர் 4 நிமிடங்கள் 17.00 செக்கன்களில் நிறைவு செய்தார்.

முன்னதாக இவர், 22 வயதின்கீழ் ஆண்களுக்கான 3000 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இக்பாலுக்கு 2ஆவது பதக்கம்

18 வயதின் கீழ் ஆண்களுக்கான 1500 மீட்டரில் பதுளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த இக்பால் பஸ்லுல்லாஹ் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய 4 நிமிடங்கள் 09.37 செக்கன்களை அவர் எடுத்தக் கொண்டார்.

முன்னதாக, இவர் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 01.31 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து மாணவி அபிலாஷினி புதிய சாதனை

4 போட்டிச் சாதனைகள்

போட்டிகளின் இறுதி நாளான நேற்றைய தினம் 4 போட்டிச் சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன.

இதில் 18 வயதின் கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதலில் பாணந்துறை றோயல் கல்லூரி வீரர் ஜயவி ரன்ஹிந்த 17.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அதே வயதுப் பிரிவில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஆர். கரீம், 7.20 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இதனிடையே, 20 வயதின்கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 46.96 செக்கன்களில் நிறைவு செய்த மதுகம ஆனந்த சாஸ்த்ராலய கல்லூரியைச் சேர்ந்த இசுரு கௌஷல்ய பென்ஸ் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

16 வயதின்கீழ் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 11.64 மீட்டர் தூரத்தை பாய்ந்ததன் மூலம் புனித லோரன்ஸ் கொன்வன்ட் பாடசாலையைச் சேர்ந்த ஓஷினி கொடிகார புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டினார்.

இந்த நிலையில், 20 வயதின் கீழ் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் வலள ஏ ரத்நாயக கல்லூரி அணி புதிய போட்டிச் சாதனையுடன் (3 நிமிடங்கள் 57.86 செக்.) தங்கப் பதக்கத்தை வென்றது. இம்முறை சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷpப் தொடரில் அஞ்சலோட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முதலாவது போட்டிச் சாதனை இதுவாகும்.

இதேவேளை, 20 வயதின் கீழ் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 55.24 செக்கன்களில் நிறைவு செய்த வலள ஏ ரத்நாயக கல்லூரி வீராங்கனை தருஷி கருணாரத்ன, முந்தைய சாதனையை சமப்படுத்தியிருந்தார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<