கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து மாணவி அபிலாஷினி புதிய சாதனை

Sir John Tarbat Senior Athletics Championship 2022

178

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 90ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் மூன்றாவது நாளான இன்றைய (15) தினமும் வடக்கு மற்றும் மலையக வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தினர்.

இதில் வடக்கைச் சேர்ந்த வீரர்கள் மைதான நிகழ்ச்சிகளிலும், மலையகத்தைச் சேர்ந்த வீரர்கள் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளிலும் பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

16 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த பரந்தாமன் அபிலாஷினி 3.00 மீட்டர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

முன்னதாக கடந்த ஜுன் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 18 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட அபிஷாலினி, புதிய கனிஷ்ட தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, 16 வயது நிரம்பிய இளம் வீராங்கனையான அபிலாஷினி அடுத்தடுத்து இரண்டு மெய்வல்லுனர் போட்டிகளில் புதிய போட்டிச் சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை குவித்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

18 வயதின் கீழ் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய பாடசாலை வீரர் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை நிறைவு செய்ய 9 நிமிடங்கள் 15.49 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இம்முறை சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் துதிஹர்ஷிதன் வென்ற 2ஆவது பதக்கம் இதுவாகும்.

முன்னதாக நேற்று (14) நடைபெற்ற 18 வயதின் கீழ் ஆண்களுக்கான 2 ஆயிரம் மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியிலும் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

22 வயதின்கீழ் ஆண்களுக்கான 3000 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் வை. ஜனுஸ்கர் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை அவர் 10 நிமிடங்கள் 21.72 செக்கன்களில் நிறைவு செய்தார்.

குறித்த போட்டியில் பங்குகொண்ட திகன ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஆர். யதீஷன், 10 நிமிடங்கள் 25.52 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

16 வயதின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் கண்டி திருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த எம்.ஏ ரிபாய் (56.14 செக்.) வெண்கலப் பதக்கத்தை சுவீகரிக்க, 22 வயதின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் கேகாலை புனித மரியாளர் கல்லூரியைச் சேர்ந்த ஆர். விமன் (55.95 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

18 வயதின்கீழ் பெண்களுக்கான 3000 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் திகன ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஏ. வினயா வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை அவர் 11 நிமிடங்கள் 34.92 செக்கன்களில் நிறைவு செய்தார்.

22 வயதின் கீழ் பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜான கல்லூரியைச் சேர்ந்த சி. ஹெரீனா (1.50 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இவர் இறுதியாக கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் 23 வயதின்கீழ் பெண்களுக்கான உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றிப் பாய்தலில் பதக்கங்களை வென்றமை குறிபபிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, போட்டிகளின் 3ஆவது நாள் முடிவில் 2 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதில் 20 வயதின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் அம்பகமுவ மத்திய கல்லூரி வீரர் டி. தர்ஷன, 52.25 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

18 வயதின்கீழ் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.09 மீட்டர் தூரத்தை பாய்ந்ததன் மூலம் மொனராகல நன்னாபுரவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மதுஷானி ஹேரத் புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டினார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<