டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் யாருக்கு?

513

டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை யார் வெல்வார்கள் என்பது இன்னும் இரண்டு போட்டி வாரங்களில் எமக்கு தெரியவரும். சம்பியன் பட்டத்தை வெல்தற்கு நான்கு அணிகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.

நேவி சீ ஹோக்ஸ் விளையாட்டுக் கழகம், கொழும்பு கால்பந்து கழகம், புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் ஆகிய நான்கு அணிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என பார்ப்போம்.

தகுதியிழப்புக்கு எதிராக சுப்பர் சன் மேன்முறையீடு

நேவி சீ ஹோக்ஸ் விளையாட்டுக கழகம் (30 புள்ளிகள்)

அண்மைய போட்டி முடிவுகள் – LWWDW

நேவி சீ ஹோக்ஸ் தற்போது 30 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளது. 15 ஆவது வாரத்திற்காக சோண்டர்ஸுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தால் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை இவ்வணி மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கும். ஆனால், சோண்டர்ஸ் பெற்ற வெற்றி அடுத்த மூன்று அணிகளுக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.  

பருவம் முழுவதும் முதல் நான்கு அணிகளுக்குள் நீடித்த அணியாக சீ ஹோக்ஸ் உள்ளது. புளூ ஸ்டார் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தனது சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்தது. அது தொடக்கம் 9 வெற்றி மற்றும் 3 சமநிலையுடன் புள்ளிப்பட்டியலில் அவ்வணியால் முதலிடத்திற்கு முன்னேற முடிந்தது. அந்த அணியின் இரண்டாவது தோல்வி கடைசியாக ஆடிய சோண்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியாக இருந்தது. எனினும், சீ ஹோக்ஸ் முதல் முறை சம்பியனாக வரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.  

நாகூர் மீரா, மொஹமட் அஸ்மீர் மற்றும் மொஹமட் ஷஹீல் ஆகியோர் திறமையை காட்டி வருவதோடு சதுரங்க சஞ்சீவ மற்றும் சுபாஷ் மதுஷானின் அனுபவ ஆட்டம் கடற்படையினர் தொடர்ந்து தரப்படுத்தலில் மேலே மிதப்பதற்கு உதவுகிறது.    

சீ ஹோக்ஸ் மாத்தறையில் பெப்ரவரி 9இல் மாத்தறை சிட்டி அணியை எதிர்கொள்ளவுள்ளது. தனது சொந்த மைதானத்தில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக அடி வரும் நிலையில் இங்கு மாத்தறை சிட்டியை எதிர்கொள்வது கடினமானது என கருதப்படுகிறது. இந்த போட்டியில் பெறும் வெற்றியானது தனது கடைசி போட்டியில் கொழும்பு கால்பந்து கழகத்தை எதிர்கொள்ள சீ ஹோக்ஸுக்கு உற்சாகத்தை அதிகரிக்கும்.  

சோண்டர்ஸை வீழ்த்தி தரப்படுத்தலில் முன்னிலை பெற்றது கொழும்பு

மாத்தறையில் 3 புள்ளிகளைப் பெற்று கொழும்பு அணியை சீ ஹோக்ஸ் எதிர்கொண்டால் அந்தப் போட்டி சம்பியன் அணியை தீர்மானிப்பதாக இருக்கும். அதனை செய்ய தவறும் பட்சத்தில் ஏனைய போட்டிகளின் முடிவுகள் தனக்கு சாதகமாக வரும் என சீ ஹோக்ஸ் காத்திருக்க வேண்டி இருக்கும்.


கொழும்பு கால்பந்து கழகம் (29 புள்ளிகள்)

அண்மைய போட்டி முடிவுகள் – DDWWW

வலுவான குழாத்துடன் இருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகம் கொண்ட அணியாகவே இம்முறை தொடரில் கொழும்பு கால்பந்து கழகம் களமிறங்கியது. 5ஆவது போட்டியில் ஏற்கனவே தரமிறக்கப்பட்டிருந்த நீர் கொழும்பு யூத் அணியிடம் 2-0 என தோற்கடிக்கப்படும் வரை அவர்களுக்கு இம்முறை தொடர் திட்டமிட்டபடியே நடைபெற்றது.

அது தொடக்கம் அடுத்தடுத்து போட்டிகள் சமநிலை பெற கொழும்பு அணி போராட வேண்டி ஏற்பட்டது. 5 போட்டிகளில் பெற்ற சமநிலையால் 10 புள்ளிகளை இழந்த நிலையில் நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு குறைந்தது. தகுதி இழப்புச் செய்யப்பட்ட சுப்பர் சன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டி ஒன்றில் கொழும்பு அணி 8-0 என்ற கோல் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பெற்றபோதும் இதனை சரி செய்ய முடியவில்லை.

கடைசி வாரத்திற்கு முந்திய வாரத்திற்காக பெப்ரவரி 9 ஆம் திகதி கொழும்பு கால்பந்து கழகம் கிண்ணத்தை வெல்லப் போட்டியிடும் மற்றொரு அணியான டிபெண்டர்ஸ் கால்பந்துக் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது. டிபெண்டர்ஸ் அணியுடன் கோல் வித்தியாசத்திலேயே கொழும்பு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. படை வீரர்களுடனான இந்தப் போட்டியில் வென்றால் முதலிடத்தில் இருக்கும் சீ ஹோக்ஸுடனான கடைசி போட்டியில் கொழும்பு அணிக்கு பெரும் சாதகமான சூழலை ஏற்படுத்தும்.  

சீ ஹோக்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் சம்பியன் அணியை தேர்வு செய்யும் போட்டியாக இருக்கும் அல்லது அடுத்து 2 அணிகளுக்கும் சம்பியன் யார் என்பதை தேர்வு செய்வதாக அமைய வாய்ப்பு உள்ளது. அது இந்த வார போட்டிகளிலேயே தங்கியுள்ளது.

தகுதியிழப்புக்கு எதிராக சுப்பர் சன் மேன்முறையீடு

கடைசி இரண்டு வாரங்களிலும் தனது நட்சத்திர வீரர்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த கொழும்பு அணி தீவிரம் காட்டும். பொட்ரிக் டிமித்ரி இந்த லீக்கில் அதிக கோல் பெற்றவராக முதலிடத்தில் இருக்கும் நிலையில் அவருக்கு உதவியாக மொமாஸ் யாப்போ, மொஹமட் ஆகிப், மொஹமட் பஸால் மற்றும் மொஹமட் ரிப்னாஸ் ஆகியோர் உள்ளனர். அனுபவ அணித்தலைவர் ரௌமி மொஹிடீன் கடந்த காலங்களில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு சாதகமாக உள்ளது.  


புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் (29 புள்ளிகள்)

அண்மைய போட்டி முடிவுகள் – WLLLD

இந்த பருவத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படாத அணியாகவே புளூ ஸ்டார் களமிறங்கியது. ஆனால் 11 வார போட்டி வரை தோல்வியுறாத அணியாக புதிய சாதனை படைக்க அந்த அணி எதிர்பார்த்தது. எனினும் மாத்தறை சிட்டி, சோண்டர்ஸ் மற்றும் ரெட் ஸ்டாரிடம் பெற்ற அடுத்தடுத்த தோல்விகள் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், கடைசியாக நடந்த போட்டியில் சொலிட் விளையாட்டுக் கழகத்திடம் பெற்ற வெற்றி புளூ ஸ்டார் சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க காரணமானது.   

அடுத்து குருநாகலையில் பெலிகன்ஸ் அணிக்கு எதிராக புளூ ஸ்டார் விளையாடவுள்ளது. அதில் மூன்று புள்ளிகளுடன் வந்தால் அந்த அணியின் கடைசி போட்டி தமக்கு சம்பியனாவதற்கான போட்டியாக அமைய வாய்ப்பு உள்ளது. எவ்வாறாயினும் ஏனைய போட்டிகள் தமக்கு சாதகமாக அமைவதும் அவசியம், குறிப்பாக சீ ஹோக்ஸ் மற்றும் கொழும்பு அணிகளின் புள்ளிகள் சரிவது அவசியம்.

புளூ ஸ்டாரின் இந்த பருவத்தின் கடைசி போட்டி டிபெண்டர்ஸ் அணிக்கு எதிராகவாகும். இரு அணிகளும் கிண்ணத்தை வெல்ல போராடும் நிலையில் இந்த ஆட்டம் உக்கிரமாக இருக்கும்.  

கால்பந்து புகைப்படங்களைப் பார்வையிட   

வெளிநாட்டில் இருந்து ஆழைக்கப்பட்ட இபின்யி சிமென்சி, எபுசன்ஜ்வா சிகோசி மற்றும் உசே ஆகிய வீரர்களைக் கொண்டே புளூ ஸ்டார் முன்னேற்றம் கண்டது. உள்ளூர் வீரர்களில் மொஹமட் இர்ஷாட், மொஹமட் அஜ்மிர், ஈ.பி. ஷன்ன மற்றும் கோல்காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோ போன்ற அனுபவ வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.   

நாட்டில் அதிக ரசிகர்கள் கொண்ட அணி என்பதால் தமது அணி கிண்ணத்தை வெல்லும் அல்லது டிபெண்டர்ஸை வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்புடன் இறுதிப் போட்டிகளில் அரங்கு நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கலாம்.


டிபொண்டர்ஸ் கால்பந்து கழகம் (28 புள்ளிகள்)

அண்மைய போட்டி முடிவுகள் –  LDDDW

இம்முறை லீக் தொடரில் அதிக அனுபவம் கொண்ட அணிகளில் ஒன்றாக இருக்கும் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் 12 ஆவது வார போட்டிகள் வரை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்தது. 2018 எப்.ஏ. கிண்ணத்தை வென்ற நிலையில் உள்ளூர் போட்டிகளில் இரண்டாவது கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடனேயே 2018 DCL தொடரில் அந்த அணி ஆடி வருகிறது.

எனினும் ரெட் ஸ்டாரிடம் 0-5 என்று மோசமான தோல்வியை சந்தித்த டிபெண்டர்ஸ் கடந்த வார போட்டியில் அப் கண்ட்ரி லயன்ஸிடம் 2-5 என தோற்றது. படையினர் இரண்டு தோல்விகளை மாத்திரம் பெற்றபோதும் அவை பெரும் பின்னடைவாக இருந்தன.    

இலங்கை விமானப்படையிடம் வெற்றி பெற்றது தொடக்கம் டிபெண்டர்ஸ் கத்துக்குட்டிகளான பெலிகன்ஸ் மற்றும் நீர்கொழும்பு யூத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை சமநிலை செய்தது. சீ ஹொக்ஸுக்கு எதிரான போட்டி கடினமாக இருந்ததோடு, அதில் ஆட்டம் சமநிலையடைந்தமையினால் தீர்க்கமான புள்ளிகளை டிபெண்டர்ஸ் இழந்தது.

டயலொக் சம்பியன்ஸ் லீக்கை வெல்ல வேண்டும் என்றால் டிபெண்டர்ஸ் தனது கடைசி இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டும். முதல் போட்டி கொழும்பு கால்பந்து கழகத்திற்கு எதிராக சவால் மிக்கது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் சம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு பறிபோய்விடும். எனவே படையினருக்கு இந்த போட்டி கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டமாகும்.  

புளூ ஸ்டார் அணிக்கு எதிரான போட்டி சமூகதளத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமாகும். டிபெண்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் எம். முர்ஷிட் புளூ ஸ்டாருக்கு எதிரான போட்டியில் 3 புள்ளிகள் நிச்சம் என்று கருத்துக் கூறியது புளூ ஸ்டார் ரசிகர்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது. எனவே, இந்தப் போட்டி இரு அணிகளினதும் கௌரவத்திற்கான ஆட்டமாகவும் மாறியுள்ளது.   

எப்போதும் திறமையை வெளிப்படுத்தும் மொஹமட் இஸ்ஸடீனின் கோல்கள் டிபெண்டர்ஸின் வெற்றிகளுக்கு முக்கியமானது என்ற நிலையில் அவரது சேவை தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகிறது. அசிகுர் ரஹ்மான், பண்டார வரகாகொட மற்றும் சஜித் குமார ஆகியோரின் திறமையும் டிபெண்டர்ஸுக்கு முக்கியம்.

இந்த நான்கு அணிகளினது தலைவிதி அந்தந்த அணிகளின் கைகளிலேயே உள்ளன. புளூ ஸ்டார் தவிர்ந்து மற்ற மூன்று அணிகளும் ஒருவருக்கு ஒருவர் ஒரு போட்டியில் மோதவிருப்பதோடு தமது இரு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றிவிடும்.

இந்த சமன்பாடு மேலும் சிக்கலானது மற்றும் குழப்பமானது. கோல் வித்தியாசங்கள், எதிர் எதிர் அணிகளுக்கு இடையிலான வெற்றி தோல்விகளும் சம்பியனை தீர்மானிப்பதாக இருக்கும்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க