வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்டுள்ள ஒரு படையாகத் திகழும் யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம், தாம் கடந்து வந்த கடந்த கால வெற்றிகளை எதிர் காலத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி, இலங்கையின் முன்னணி அணிகளில் ஒன்றாக வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி வருகின்றது.

பொலிஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பாடும் மீன்

கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற FA கிண்ணத்தின் 32 அணிகளைக் கொண்ட சுற்றில் பெனால்டி..

வட மாகாணத்தில் உள்ள அனைத்து கால்பந்து அணிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் ஒரு முக்கிய அணியாக முன்னேறியுள்ள இவர்கள், அன்று முதல் இன்று வரை யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்து கால்பந்து ரசிகர்களாலும் கதைக்கப்படும் ஒரு தரப்பினராகவும் திகழ்கின்றனர்.

கழகத்தின் வரலாறு

நீண்ட கால வரலாற்றைக் கொண்ட பாடும் மீன் விளையாட்டுக் கழகம் 1963ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே சிறந்த முறையில் பிரகாசித்து வரும் இவ்வணி, வெற்றிகளை மாத்திரம் சுவைக்காமல் தமது கழகத்தில் இருந்து பல வீரர்களை தேசிய அணிக்கும் உருவாக்கிக் கொடுத்துள்ளது.

அவர்களில் குறிப்பாக அமரர் S.N.J அன்ரனி, அகஸ்டின், அன்ரனி தாஸ் ஆகியோரை முக்கியமாகக் குறிப்பிடலாம். அதேபோன்று, இளையோர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களாக ஜயன்தன் மற்றும் ரஜிகுமார் சான்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இவை தவிர வடக்கின் பலம் பொருந்திய அணியாக அன்று முதல் உருவெடுத்துள்ள இவர்கள் வட மாகாணத்தில் அதிக வெற்றிகளையும், ஒரே தொடரில் தொடர்ந்து  மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றவர்கள் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் பாடும் மீன் கழகம்

பாடும் மீன் விளையாட்டுக் கழகம் இலங்கையில் மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இயங்கி வருகின்றமை இக்கழகத்தின் அத்திவாரம் பலமாய் இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது.

குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் சுமார் 33 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட கழகங்களில் ஐரோப்பாவில் மிகவும் புகழ் வாய்ந்த கழகமாக பிரான்ஸ் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் இருக்கின்றது.

அது போன்றே, ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் சுமார் 25 வருட காலம் செயற்படும் இக்கழக அணிகள், அங்கு தமிழ்ச் சங்கங்களின் ஏற்பாட்டில் இடம்பெறும் மிகப் பெரிய சுற்றுத் தொடர்கள் உட்பட பல போட்டிகளில் வெற்றிகளை சுவைத்துள்ளன.

இவர்களது வளர்ச்சிப் படியின் அடுத்த கட்டமாக பாடும் மீன் விளையாட்டுக் கழகம் ஐக்கியராச்சியம் மற்றும் கனடா அகிய நாடுகளிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கழகம் பெற்றுள்ள ஆரம்பகால வெற்றிகளில் சில…  

1972 – அரியாலை கிண்ணம், தேசிய ரீதியிலான ஸ்ரீமாவோ பண்டாரநாயக ஞாபகார்த்த கிண்ணத்தில் காலிறுதி வரை முன்னேற்றம்  

1973 – புனித வளன் கிண்ணம், தேசிய ரீதியிலான தலைவர் கிண்ணத் தொடரில் அரையிறுதி வரை முன்னேற்றம்

1975 – வைத்தியாம் பிள்ளை வெற்றிக் கிண்ணம்

1977, 1978 – ஜொலி ஸ்ரார் கிண்ணம்

1978 – செபஸ்டியன் பிள்ளை ஞாபகார்த்த கிண்ணம், குமரையா வெற்றிக் கிண்ணம், கிறீன் பீல்ட் வெற்றிக் கிண்ணம்

1968, 1974, 1975, 1992, 1997   – யாழ்ப்பாண லீக் சம்பியன்  

இவை தவிர பிற்காலத்தில் முரசொலி வெற்றிக் கிண்ணம், விக்டர் கிண்ணம், சென்றொக்ஸ் கிண்ணம், டாக்டர் பிலிப் கிண்ணம், ரஞ்சன் சித்தப்பா கிண்ணம், ஈழநாதம் கிண்ணம், தலைவர் கிண்ணம், தூய ஒளிக் கிண்ணம் உட்பட பல கிண்ணங்களை இக்கழக அணி வெற்றி கொண்டுள்ளது.

இறுதி நொடி வரையிலான போராட்டத்தில் யாழ் சென் மேரிசை வீழ்த்தியது சுபர் சன்

இந்த பருவகால FA கிண்ண சுற்றுத் தொடரின் 16 அணிகளுக்கு இடையிலான மோதலின்..

அண்மைக் காலமாக

வடக்கின் மிகப் பெரிய கால்பந்து சமராகக் கருதப்படும் டான் டிவி யின் ”புதிய விடியல்” சம்பியன் கிண்ணத்தை பாடும் மீன் விளையாட்டுக் கழகம் 2014ஆம் மற்றும் 2016ஆம் அண்டுகளில் கைப்பற்றியிருந்தது.

இவர்கள் தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தி மிக முக்கிய வெற்றிகளைப் பெற்ற மற்றொரு ஆண்டாக 2016ஆம் ஆண்டைக் குறிப்பிடலாம். யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி, தேசிய ரீதியிலும் தமது சிறப்பாட்டத்தைக் காண்பித்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிவு இரண்டிற்கான (டிவிஷன் 2) கால்பந்து தொடரில் மூன்றாம் இடத்தை தம்வசப்படுத்தினர்.

அத்தொடரின் அரையிறுதியில் ரட்னம் விளையாட்டுக் கழகத்திடம் தோல்வி கண்ட பாடும் மீன் அணி, மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் கிரேட் ஸ்டார் அணியை வெற்றி கொண்டனர்.

அதேபோன்று, கடந்த பருவகால FA கிண்ணத் தொடரில் 32 அணிகள் மோதும் சுற்று வரை முன்னேறியிருந்த அவர்கள், இம்முறை 32 அணிகள் மோதும் சுற்றில் பலம் மிக்க பொலிஸ் அணியையும் வீழ்தியிருந்தனர்.

முக்கிய வீரர்கள்

அனுபவ ரீதியிலும், திறமை ரீதியிலும் அணிக்கு தலைமை தாங்கி, சிறந்த முறையில் இளம் வீரர்களை வழிநடாத்தும் ஒரு பாரிய பணியை கோல் காப்பாளர் செபஸ்டியன் ராஜ்குமார் மேற்கொண்டு வருகின்றார். சுமார் 15 வருட காலமாக அணியில் விளையாடி வரும் இவர், அணியின் வரலாறு தெரிந்த சிரேஷ்ட வீரராக இருக்கின்றார்.  ராஜ்குமார் தனது அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றமையே, 35 வயதைக் கடந்தும் அவர் அணியில் இன்னும் இடம் பிடித்துள்ளமைக்கு காரணியாக உள்ளது.

கோல் காப்பாளருக்கு தட்டுப்பாடோ, குறையோ அற்ற இவ்வணியின் மற்றொரு கோல் காப்பாளராக புனித ஹென்ரியரசர் கல்லூரியின் முன்னாள் வீரர் பிளேந்திரன் பிரதீபன் உள்ளார். இவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முக்கியமான 5 தொடர்களில் தொடர்ச்சியாக சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.

அமுதன் என அழைக்கப்படும் ஜூலியஸ் கப்டன் ஐ பொருத்தவரை, பின்களத்தின் மத்தியில் விளையாடும் இவர், அணியின் பின்களத்தை முழுமையாக கட்டுப்படுத்தி சிறந்த முறையில் இயக்கும் ஒருவரக உள்ளார்.

ரஜிகுமார் சான்தன் 17 வயதின் கீழ் தேசிய அணியில் விளையாடிய இவர், கடினமான பந்துகளை கோலாக மாற்றக்கூடிய விஷேட திறன் கொண்டவர். புனித பத்திரிசியார் கல்லூரியின் முன்கள வீரரான இவர் கொத்மலே கிண்ணம், மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தொடர்களில் தனது கல்லூரி அணியின் வெற்றிகளுக்கு முக்கிய புள்ளியாக இருந்துள்ள ஒருவர்.

வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி

அணியின் முன்னனி வீரர்கள் மரியதாஸ் நிதர்சன்-அன்ரன் சார்ள்ஸ்-அன்ரனி யுனிற்றன்- ஜெக்சன்..

பயிற்றுவிப்பாளர்

கடந்த ஒரு வருடமாக அணியைப் பொறுப்பெடுத்து பயிற்சிகளை வழங்கி வருகின்றார் சுப்ரமணியம் உதயனன். இவரது பயிற்சிகளில் பல மாற்றங்களை கண்டுள்ள பாடும் மீன் அணியினர், எதிர்கால இலக்குகளை மையமாக வைத்தே தற்போதைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் வீரர்களுக்கு அனுபவங்களை வழங்கியும், புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தும் எதிர்காலத்தில் புதிய வழியில் அணியை கொண்டு செல்வதற்காக காய்நகர்த்தல்களை இவர் மேற்கொண்டு வருகின்றார்.

இறுதியாக

நீண்ட கால வரலாற்றையும், சாதனை வெற்றிகளையும் படைத்துள்ள பாடும் மீன் விளையாட்டுக் கழகத்தின் ஒரே எதிர்பார்ப்பாக, இலங்கையின் முன்னணி கழகங்களுக்கு சவால் விடும் ஒரு அணியாக முன்னேறுவதாகவே உள்ளது. இதற்காக, எதிர்வரும் வருடங்களில் அவர்கள் பிரிவு 2 மற்றும் பிரிவு 1 போட்டித் தொடர்களில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்துடன் பயணிக்கின்றனர்.