விடா முயற்சியினால் பரிசுத்தொகையை பெறும் பங்களாதேஷ் வீரர்கள்

311

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான 2019 உலகக் கிண்ண போட்டி வெற்றிகளுக்கான மேலதிக கொடுப்பனவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்க முடிவு செய்துள்ளது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் நலன்புரி சங்கத்தின் விடா முயற்சியின் காரணமாக பங்களாதேஷ் டகா 2 கோடியை உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய வீரர்களுக்கான பரிசுத் தொகையாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

உலகின் உயரமான கிரிக்கெட் வீரர்கள்

கடந்த வருடம் ஜூலை 5ம் திகதி பங்களாதேஷ் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியுடன் தங்களுடைய உலகக் கிண்ணத்தை நிறைவுசெய்திருந்தது. அதன்படி, தங்களுடைய மூன்று வெற்றிகளுக்கும் சேர்த்து ஒரு இலட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக ஒரு போட்டியின் வெற்றிக்கு 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வீதம் வீரர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

வீரர்களுக்கான இந்த பரிசுத்தொகையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளமையை பங்களாதேஷ் கிரிக்கெட் நலன்புரி சங்கத்தின் தலைவர் நயிமுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேநேரம், குறித்த பரிசுத்தொகையை பெறுவதற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சம்மேளனமும் உதவியதாக இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன்படி, வீரர்களுக்கு வழங்கவுள்ள குறித்த பரிசுத்தொகையை எதிர்வரும் 14 நாட்களுக்குள், கிரிக்கெட் சபை கணக்கிடம் இருந்து, வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடமிருந்து, பரிசுத்தொகையை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என வீரர்கள் பக்கமிருந்து கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

குறித்த இந்த பரிசுத் தொகை தொடர்பாக கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் நலன்புரி சங்கத்தின் தலைவர் நயிமுர் ரஹ்மான், “வெற்றிபெற்ற போட்டிகளுக்கான பணம் வீரர்கள் பெற்றுக்கொள்வர். வீரர்கள் பணத்தை பெற்றுக்கொள்வார்களா? என்ற பல கேள்விகள் எழுந்து வந்தன.

ஆனால், கிரிக்கெட் சபையுடன் நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில், குறித்த பரிசுத் தொகை தொடர்பான கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. வீரர்கள் பணத்தை கட்டாயம் பெற்றுக்கொள்வர். பணத்தை வழங்குவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அலுவலகம் திறக்கப்படும் பட்சத்தில், வீரர்களுடைய கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்படும்” என்றார்.

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் கடந்த வருடம் நிறைவுபெற்ற நிலையில், சுமார் 11 மாதங்கள் கழித்து பங்களாதேஷ் வீரர்கள் தங்களுடைய பரிசுத்தொகையை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<