அவிந்து தீக்ஷனவின் அதிரடி பந்து வீச்சின் மூலம் ரிச்மண்ட் கல்லூரி அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி

118
 

இன்று முடிவடைந்த சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் I சுற்றுப் போட்டியில் ரிச்மண்ட் மற்றும் மஹாநாம கல்லூரிகளுக்கு இடையிலான காலிறுதி கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவுற்றாலும், முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்ட வெற்றியால் காலி ரிச்மண்ட் கல்லூரி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.

ஹொரண, அர்ரோன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், இரண்டு நாட்களை கொண்ட இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய காலி, ரிச்மண்ட் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி 52 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. அதிகபட்ச ஓட்டங்களாக கசுன் தாரக்க மற்றும் அவிந்து தீக்ஷன முறையே 33, 29 ஓட்டங்களை பதிவு செய்தனர். அதேநேரம் சிறப்பாக பந்து வீசி ஓட்டங்களை மட்டுபடுத்திய ஹஷான் சந்தீப 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹேஷான் ஹெட்டியாராச்சி மற்றும் நிதுக்க வெலிக்கல ஆகியோர் தங்களுக்கிடையே தலா 2 விக்கெட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அதனையடுத்து, களமிறங்கிய மஹாநாம கல்லூரி, அவிந்து தீக்ஷனவின் அதிரடி பந்து வீச்சில் விக்கெட்டுகளை வேகமாக சொற்ப ஓட்டங்களுக்கு இழந்ததன் காரணமாக 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 83 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சை நிறுத்திக்கொண்டது. கூடிய ஓட்டங்களாக நிதுக்க வெலிக்கல 17 ஓட்டங்களை பதிவு செய்த அதேநேரம் அதிரடியாக பந்து வீசிய அவிந்து தீக்ஷன 36 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அந்த வகையில், முதல் இன்னிங்சில் 67 ஓட்டங்களுடன் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் இன்னிங்சுக்காக, இரண்டாம் மற்றும் இறுதி நாளான இன்று ரிச்மண்ட் கல்லூரி களமிறங்கியது. இன்றைய நாள் ஆட்ட நிறைவின் போது 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து கமிந்து மென்டிஸ்சின் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 111 ஓட்டங்களின் உதவியுடன் 171 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும், போதிய நேரமின்மை காரணமாக போட்டி சமநிலையில் முடிவுற்ற போதிலும், முதல் இன்னிங்சில் வெற்றியீட்டிய காலி, ரிச்மண்ட் கல்லூரி சிங்கர் கிண்ண டிவிஷன் 1 அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 150/8d (52) – கசுன் தாரக்க 33, அவிந்து தீக்ஷன 29, ஹஷான் சந்தீப 3/50, ஹேஷான் ஹெட்டியாராச்சி 2/22, நிதுக்க வெலிக்கல 2/23

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்):  83/9 d (39) – நிதுக்க வெலிக்கல 17, அவிந்து தீக்ஷன 6/36

ரிச்மண்ட் கல்லூரி, காலி (இரண்டாம் இன்னிங்ஸ்): 171/5 (47) கமிந்து மென்டிஸ் 111*, ரவிஷ்க விஜயசிரி 29, விஹான் முதலிகே 2/32