ஜிம்பாப்வே அணியின் சகலதுறை வீரர் சிக்கண்டர் ரஷாவுக்கு அவருடைய போட்டிக்கட்டணத்தில் 50 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
நமீபியா அணிக்கு எதிராக பலுவாயோ குயிண்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற T20I போட்டியில் ஐசிசியின் முதற்தர விதிமுறையை மீறியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
>> இங்கிலாந்து ஒருநாள், T20 அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்
அதன்படி சிக்கண்டர் ரஷா, நடுவரின் தீர்ப்பை அவமதிக்கும் முறையில் செயற்பட்ட காரணத்தால், போட்டிக்கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், 2 தரக்குறைப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிக்கண்டர் ரஷாவின் குற்றம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிசி, நமீபியா அணி வீசிய 16வது ஓவரில் சிக்கண்டர் ரஷா ஆட்டமிழந்துள்ளார். நடுவர் LBW ஆட்டமிழப்பை வழங்கிய பின்னர், தன்னுடைய துடுப்பாட்ட மட்டையை காண்பித்து, நடுவரிடம் தகாத வார்த்தைகளைக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஆடுகளத்திலிருந்து வெளியேறும் வரையிலும் சத்தமாக பேசிக்கொண்டும், தகாத வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டும் மைதானத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
போட்டியை தொடர்ந்து போட்டி மத்தியஸ்தர் எண்டி பைக்ரொப்ட் மேற்கொண்ட விசாரணையில், சிக்கண்டர் ரஷா தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தால், மேற்குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிக்கண்டர் ரஷா எதிர்வரும் 24 மாதங்களுக்குள் மேலும் 2 தரக்குறைப்பு புள்ளிகளை பெற்றால், குறித்த புள்ளிகளானது இடைநீக்க புள்ளிகளாக மாறும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது. ஒரு வீரர் 2 இடைநீக்க புள்ளிகளை பெற்றால், ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் அல்லது 2 T20I போட்டிகளில் விளையாடுவதற்கான தடையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<