இங்கிலாந்து ஒருநாள், T20 அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்

92
 

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான மெத்யூ மோட், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளுக்கான இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் அணிகளுக்கு தனித்தனி தலைவர்களை நியமித்ததுபோல், தற்போது பயிற்சியாளர்களையும் தனித்தனியாக நியமித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் T20 அணிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மெத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் முதல்தர மற்றும் லிஸ்ட் A கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அனுபவத்தைக் கொண்ட இவர், அவுஸ்திரேலியா சார்பில் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. ஆனால் பயிற்சியாளராக பல ஆண்டுகால அனுபவம் கொண்டவர்.

48 வயதான மெத்யூ மோட், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் T20 அணியின் பயிற்சியாளராக நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனது பணியை அவர் ஆரம்பிக்கவுள்ளார்.

இதனிடையே, 2015ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மெத்யூ மோட் பணியாற்றி வருகின்றார்.

குறித்த ஏழு ஆண்டு காலத்தில் அவுஸ்திரேலிய மகளிர் அணி இரண்டு தடவைகள் T20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தையும் அவுஸ்திரேலிய அணி வென்றதுடன், நான்கு ஆஷஸ் தொடர்களில் அவுஸ்திரேலிய மகளிர் அணி தோல்வியை சந்திக்காமல் உள்ளது. இவரது பயிற்றுவிப்புக் காலத்தில் தான் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 26 ஒருநாள் போட்டிகளை வென்று உலக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<