MCA ப்ரீமியர் லீக் ஹெய்லிஸ் அணி வசம்

79

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான MCA ப்ரீமியர் லீக் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா அணியை இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் தோற்கடித்து ஹெய்லிஸ் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. 

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பட்டில் நடாத்தப்பட்ட இந்தத் தொடரின் இறுதிப் போட்டி MCA மைதானத்தில் இன்று (26) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஹெய்லிஸ் அணித்தலைவர் அவிஷ்க பெர்னாண்டோ முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். 

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யுனிச்செலா அணியின் ஆரம்ப வரிசை வீரர்கள் சோபிக்கத் தவறினர். அந்த அணியின் முதல் 5 விக்கெட்டுகளும் 67 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. 

மத்திய வரிசையில் கமிந்து மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்க அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர். இருவரும் 6 ஆவது விக்கெட்டுக்காக 53 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். 

கமிந்து மெண்டிஸ் 33 பந்துகளுக்கு 35 ஓட்டங்களை பெற்றதோடு வனிந்து ஹசரங்க அதிரடியாக 25 பந்துகளில் 4 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்களை குவித்தார். 

Photos: Hayleys PLC Vs. MAS Unichela | 27th Singer-Mercantile T20 Final

இதன் மூலம் யுனிச்செலா 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. மீண்டும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு சமரகோன் 4 ஓவர்களுக்கும் 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இலங்கை வளர்ந்துவரும் அணி வீரரான லஹிரு சமரகோன் அரையிறுதிப் போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஹெய்லிஸ், ஆரம்ப விக்கெட்டுகளை முன்கூட்டியே இழந்தபோதும் முதல் வரிசையில் வந்த ரொன் சந்திரகுப்தா தனது அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். 

49 பந்துகளுக்கு முகம்கொடுத்த சந்திரகுப்தா 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற்றார். அவர் 3 ஆவது விக்கெட்டுக்கு அனுபவ வீரர் சச்சித்ர சேரசிங்ஹவுடன் இணைந்து 71 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.  27 பந்துகளுக்கு முகம்கொடுத்த சச்சித்ர சேரசிங்ஹ 33 ஓட்டங்களை பெற்றார். 

இதன் மூலம் ஹெய்லிஸ் 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 146 ஓட்டங்களை எட்டியது. 

போட்டியின் சுருக்கம்

மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செலா – 145 (19.1) – வனிந்து ஹசரங்க 42, கமிந்து மெண்டிஸ் 35, லஹிரு சமரகோன் 4/19, சந்துஷ் குணதிலக்க 2/35

ஹெய்லிஸ் – 146/4 (17.5) – ரொன் சந்திரகுப்தா 55*, சச்சித்ர சேர்சிங்ஹ 33, லஹிரு சமரகோன் 21, அனுக் பெர்னாண்டோ 2/19

முடிவு – ஹெய்லிஸ் 6 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<