இந்திய அணியிலிருந்து வெளியேறும் ஸ்ரேயாஸ் ஐயர்

154
Shreyas Iyer ruled out of Australia ODI series

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் விலியுள்ளார்.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது ஸ்ரேயாஸ் விலகியிருப்பதை இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் டி. திலீப் உறுதிப்படுத்தினார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியதுடன், 2க்கு 1 கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், நாளை (17) ஆரம்பமாக உள்ளது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அகமதாபாத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4ஆவது நாளில் களமிறங்காமல் போட்டியில் இருந்து விலகினார். அதனையடுத்து அவருக்கு scan பரிசோதனை செய்யப்பட்டது. வைத்தியர்களின் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

ஏற்கனவே முதுகு வலி பிரச்சினையால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் இந்திய கிரிக்கெட் சபை மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் திலீப் கூறியதாவது,

விளையாட்டின் போது காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நம்மிடம் மிகச் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. ஸ்ரேயாஸ் ஐயர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அவர் களத்திற்கு திரும்புவார். அவரது உடல் நிலை குறித்த விபரங்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<