பாகிஸ்தான் T20I அணிக்கு புதிய தலைவர் நியமனம்

93

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் T20I அணியின் வழக்கமான தலைவர் பாபர் அசாமுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், பந்துவீச்சு சகலதுறை வீரர் சதாப் கான் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தவுள்ளார்.

அதேபோல, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான மொஹமட் ரிஸ்வான், சஹீன் ஷா அப்ரிடி, பக்கர் ஜமான் மற்றுதம ஹரிஸ் ரவூப் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இந்தத் தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க அந்நாட்டு தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, தற்போது நடைபெற்று வருகின்ற பாகிஸ்தான் சுபர் லீக்கில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இளம் வேகப் பந்துவீச்சாளர் இஹ்ஸால்லாஹ், சயிம் ஐயூப், தய்யப் தாஹிர் மற்றும் ஸமான் கான் ஆகிய வீரர்கள் முதல் தடவையாக பாகிஸ்தான் T20I அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, அனுபவ சகலதுறை வீரராக இமாத் வசீம் மீண்டும் பாகிஸ்தான் T20I அணியில் பெயரிடப்பட்டுள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளே-ஆப் சுற்றுப்போட்டிகள் நாளை (15) ஆரம்கமாகவுள்ளதுடன், மார்ச் 19ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, மார்ச் 25, 27 மற்றும் 29 ஆகிய திகதிகளில் இரு அணிகளுக்குமிடையிலான T20I தொடர் சார்ஜாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரில் பாகிஸ்தான் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராகவும், துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் முன்னாள் மொஹமட் யூசுப் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் T20I அணி விபரம்: சதாப் கான் (தலைவர்) அப்துல்லாஹ் சபீக், அசாம் கான், பஹீம் அஷ்ரப், இப்திகார் அஹ்மட், இஹ்ஸால்லாஹ், இமாத் வசீம், மொஹமட் ஹாரிஸ், மொஹமட் நவாஸ், மொஹமட் வசீம், நசீம் ஷா, சயிம் ஐயூப், ஷான் மசூத், தய்யப் தாஹிர், ஸமான் கான்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<