ஆஷஸ் டெஸ்ட் தொடரால் இங்கிலாந்து, ஆஸிக்கு நேர்ந்த கதி

The Ashes 2023

248
England and Australia lose crucial WTC 2023

ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ICC விதித்துள்ளது. 

அவுஸ்திரேலியாஇங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த தொடரில் இரு அணியினரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காமல் தாமதப்படுத்தியதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கண்டறிந்துள்ளது. 

இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் 5 டெஸ்ட் போட்டிகளில் 4இல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதில் லண்டன் லோர்ட்ஸில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட்டில் மட்டும் 9 ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் அந்த அணி 4 டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து 19 ஓவர்கள் தாமதமாக வீசியிருக்கிறது. 

அதேபோல, அவுஸ்திரேலியா அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டும் இந்த தவறை செய்திருக்கிறது. அந்த அணி மன்செஸ்டரில் மழையால் சமநிலையில் முடிந்த 4ஆவது டெஸ்ட்டில் மட்டும் 10 ஓவர்கள் மெதுவாக வீசியிருக்கிறது. 

ICC இன் திருத்தப்பட்ட புதிய விதிப்படி தாமதமாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஒரு புள்ளி குறைக்கப்படும். அத்துடன், ஒரு ஓவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து அணிக்கு 5 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும். 

அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளுக்கு முறையே 10, 45, 15 மற்றும் 25 சதவீதத் தொகையை ICC அபராதமாக விதித்துள்ளது. 

இதேவேளை, இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 28 புள்ளிகளை எடுத்து இருந்தது. அதில் 19 புள்ளிகளை இழந்து, தற்போது அதன் புள்ளிகள் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. அதேபோல அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் 28இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது 

இதையடுத்து தற்போது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 100 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி முதலிடத்திலும், இந்தியா 66.67 சதவீத புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், அவுஸ்திரேலியா 30 சதவீத புள்ளியுடன் 3ஆவது இடத்திலும், இங்கிலாந்து 15 சதவீத புள்ளியுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<