T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

281

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தானின் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் போட்டி நடுவர் மரணம்

இந்த ஆண்டுக்கான (2022) ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடிய அதே அணியே பெரும்பாலான மாற்றங்களின்றி T20 உலகக் கிண்ணத்திற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் குழாத்தில் அதிரடிவீரர் பகார் சமானிற்குப் பதிலாக இடதுகை துடுப்பாட்டவீரரான ஷான் மசூத் இடம்பெற்றிருக்கின்றார்.

இதுவரை T20 சர்வதேச போட்டிகளில் அறிமுகம் பெறாத ஷான் மசூத் பாகிஸ்தானின் உள்ளூர் தொடர்களான பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) மற்றும் நெஷனல் T20 கிண்ணம் (National T20 Cup) ஆகிய தொடர்களில் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதில் ஷான் மசூத் இந்த ஆண்டுக்கான PSL தொடரின் 12 இன்னிங்ஸ்களில் ஆடி 478 ஓட்டங்கள் குவித்ததோடு, நெஷனல் T20 கிண்ணத் தொடரில் 204 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஷான் மசூத் தடுமாறி வருகின்ற பாகிஸ்தான் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் காயம் காரணமாக ஆசியக் கிண்ணத் தொடரில் ஆடாது போன நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான சஹீன் அப்ரிடி, T20 உலகக் கிண்ண குழாத்தில் மீண்டும் இடம்பெற்றிருப்பதோடு ஆசியக் கிண்ணத்தில் காயத்துக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் வஸீமும் அணியில் மீண்டிருக்கின்றார்.

இதேவேளை ஹஸன் அலி மற்றும் சஹ்நவாஸ் தஹானி ஆகியோர் பாகிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாத்தில் வாய்ப்பினை பெறத் தவறியிருக்கின்றனர். எனினும் சஹ்நவாஸ் தஹானி, பகார் சமானுடன் இணைந்து T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தானின் மேலதிக வீரராக காணப்படுகின்றார்.

பாகிஸ்தான் அணி T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இங்கிலாந்துடன் 7 போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவுள்ளதோடு, அதன் பின்னர் நியூசிலாந்துக்கு பயணமாகி அங்கே நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் முத்தரப்பு T20 தொடரிலும் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 2009ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி, 2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க பயிற்சிவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ள மார்க் பௌச்சர்

அதேநேரம் 2022ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் குழு B இல் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் மெல்போர்ன் நகரில் இடம்பெறவுள்ள தமது முதல் போட்டியில் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இந்தியாவை எதிர்கொள்ளவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் T20 உலகக் கிண்ண குழாம்

பாபர் அசாம் (தலைவர்), சதாப் கான் (பிரதி தலைவர்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவுப், இப்திக்கார் அஹ்மட், குஸ்தில் சாஹ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வஸீம், நஸீம் சாஹ், சஹீன் அப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதிர்

மேலதிக வீரர்கள் – பகார் சமான், சஹ்நவாஸ் தஹானி, மொஹமட் ஹரிஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<