ஒருநாள் அணியில் ஒரு மாற்றத்துடன் T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

0

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட T20i தொடருக்கான இலங்கை குழாம் இன்று (27) அறிவிக்கப்பட்டுள்ளது.

அபார வெற்றியுடன் ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான……

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியினர் தற்போது இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகின்றனர். இந்த ஒருநாள் தொடரின் பின்னர் இரு அணியினரும் T20 தொடரில் மோதவுள்ளனர்.

குறித்த T20 தொடருக்கான இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட அதே அணியில் ஒரு மாற்றத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், இந்த T20 குழாத்தில் இலங்கை ஒருநாள் அணியின் தலைவரான திமுத் கருணாரத்ன நீக்கப்பட்டு லசித் மாலிங்க, இலங்கை தரப்பினை வழிநடாத்தவுள்ளார்.

ஒருநாள் தொடருக்கு அறிவிக்கப்பட்ட அணியில் ஒரு மாற்றம் மாத்திரமே இடம்பெற்றிருப்பதால் இலங்கை கடைசியாக இந்தியாவுடன் விளையாடிய T20 தொடரில் பங்கேற்ற  அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றார்.

அதேநேரம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயற்பட்ட திசர பெரேராவிற்கும், செஹான் ஜயசூரியவிற்கும் தங்களது திறமைகளை T20 போட்டிகளில் வெளிக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கின்றது. 

அதேவேளை, பானுக்க ராஜபக்ஷ போன்று இந்திய அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடிய துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணத்திலக்க, ஒசத பெர்னாந்து  ஆகியோரும் வேகப் பந்துவீச்சாளரான கசுன் ராஜிதவும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20 போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றனர். கசுன் ராஜித இல்லாத நிலையில் இந்திய அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடாத நுவன் பிரதீப் இலங்கை T20 அணிக்கு தனது பந்துவீச்சு மூலம் பலமளிக்கவுள்ளார்.

தற்போது இருக்கும் வீரர்களில் இலங்கை T20 அணிக்கு துடுப்பாட்ட வீரர்களாக குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ் ஆகியோர் வலுச்சேர்க்கின்றனர்.

இவர்களோடு T20 அணிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் திசர பெரேரா, செஹான் ஜயசூரிய ஆகியோர் தனன்ஞய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் ஷானக்க ஆகியோருடன் சேர்த்து சகலதுறை வீரர்களாக இலங்கைத் தரப்பினை உறுதிப்படுத்துகின்றனர். 

பந்துவீச்சினை பொறுத்தவரையில் அணித்தலைவரான லசித் மாலிங்க வேகப் பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, இசுரு உதான ஆகியோரின் உதவிகளைப் பெறுகின்றார்.  இவர்களோடு வனிந்து ஹஸரங்க, லக்ஷான் சண்டகன் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக மேற்கிந்திய தீவுகளுக்கு நெருக்கடித்தர காத்திருக்கின்றனர். 

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் T20 தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 04ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 06ஆம் திகதியும் கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது. 

இலங்கை குழாம் – லசித் மாலிங்க (அணித்தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, நிரோஷன் டிக்வெல்ல, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, ஷெஹான் ஜயசூரிய, வனிந்து ஹஸரங்க, தசுன் ஷானக்க, திசர பெரேரா, லக்ஷான் சந்தகன், நுவன் பிரதீப், இசுரு உதான, லஹிரு குமார  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<