டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானங்கள் அறிவிப்பு

280
 

எதிர்வரும் 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்துள்ளது.

இதன்படி, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் ஆண்டின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்திலும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஐசிசி இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெவ் அலார்டைஸ் கருத்து வெளியிடுகையில்,

”அடுத்த இரண்டு பருவகாலங்களுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கு பிரசித்திபெற்ற இரண்டு மைதானங்களை உறுதிசெய்வதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அத்துடன், அடுத்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஓவலில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மைதானம் மரபு ரீதியான மற்றும் அற்புதமான சுற்றுசூழலைக் கொண்டுள்ளது. இதுபோன்ற முக்கியமான போட்டிக்கு இந்த மைதானம் மிகவும் பொருத்தமானது. அதனைத் தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை லோர்ட்ஸில் நடத்தவுள்ளோம். இந்த மைதானம் இறுதிப் போட்டிக்கு பொருத்தமான பின்னணியை வழங்கும்” என அவர் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஐசிசி இன் முழு நேர உறுப்பினர்களாக உள்ள 9 டெஸ்ட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு இந்தத் தொடர் நடத்தப்படும். ஒவ்வொரு அணியும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் 3 தொடர்கள் சொந்த நாட்டிலும், 3 தொடர்கள் வெளிநாடுகளிலும் நடக்கும். லீக் சுற்றில் முதலிரெண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இதன்படி, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்குரார்ப்பண அத்தியாயம் 2019-21 பருவகாலத்தில் நடைபெற்றதுடன், இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. அதில் நியூசிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், 2021-23 தொடருக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதனை லண்டன் ஓவல் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேநேரம் எதிர்வரும் 2023-25 பருவகாலத்துக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.

இதேவேளை, 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<