வேகத்தால் மிரட்டிய மாலிங்கவின் இறுதி ஓவர் எவ்வாறு இருந்தது?

647
Image Courtesy - IPLT20.COM

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் அபாரமான இறுதி ஓவரின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி, ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை நேற்று (12) கைப்பற்றியிருந்தது. மும்பை அணியின் சம்பியன் கனவினை நனவாக்கிய லசித் மாலிங்க, உலகக் கிண்ணத்தின் மீதான எதிர்பார்ப்பை இலங்கை இரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளார்.

மாலிங்கவின் சாகசத்தால் மீண்டும் சம்பியனாகிய மும்பை

ஐ.பி.எல். தொடரில் இன்று (12) நடைபெற்ற இறுதிப் போட்டியில்….

கடந்த காலங்களில் லசித் மாலிங்கவின் பந்து வீச்சு அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக அவரது வேகம், அவருக்கே உரித்தான யோர்க்கர், அவுட்-ஸ்விங் பந்துகள் மற்றும் மிதவேகமான பந்துகள் என வெவ்வேறான பந்துகளை சிறப்பாக கையாளக்கூடியவராக மாலிங்க இருந்தார்.

இவ்வாறு, பல்வேறு பந்துவீச்சு யுத்திகளை கைவசம் கொண்டிருந்தாலும், தனது வித்தியாசமான பந்து வீச்சு பாணியால் தொடர்ச்சியாக உபாதைகளுக்கு முகங்கொடுத்து வந்தார். உபாதைக்கு பின்னர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய இவரால், முன்னர் போன்று முழுமையான உத்வேகத்துடன் பந்து வீச்சை வெளிப்படுத்த முடியவில்லையென்பதுடன், அவரது வேகமும் குறைந்தது. இதனால், பல்வேறு தரப்பினராலும் மாலிங்க விமர்சிக்கப்பட்டு வந்தார்.

ஆனால், வேகத்தை விடவும், அனுபவம் அவரின் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது. மிதவேக பந்துகளால் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்தார். இதன் காரணமாக 2018ம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் வாங்கப்படாத இவர், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.

இம்முறை ஐ.பி.எல். தொடரில் விளையாடிய மாலிங்கவின் பந்து ஓவர்களுக்கு எதிரணிகளால் ஓட்டங்கள் பெறப்பட்ட போதும், முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இம்முறை நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான முக்கியமான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியதுடன், தனது பந்துவீச்சு வேகத்தையும் மெதுவாக அதிகரித்திருந்தார்.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இலங்கை அணி

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்…..

ஒரு காலத்தில் 155 கிலோமீற்றர் வேகத்தில் பந்து வீசிய லசித் மாலிங்கவினால் உபாதைக்கு பின்னர் அணிக்கு திரும்பியதிலிருந்து மணித்தியாலத்துக்கு 140 கிலோமீற்றர் வேகத்துக்கு பந்து வீசுவதற்கும் முடியாமலிருந்தார். அவரது உடற்தகுதியும் அவ்வோப்போது கேள்விக்குறியாகியது. எனினும், இந்த ஐ.பி.எல். தொடரில் வேகத்தை அதிகரித்த இவர், நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பந்து வீசிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, வெற்றிக்காக 150 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், மாலிங்க தனது முதல் மூன்று ஓவர்களில் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார். இறுதியில், ஒரு ஓவருக்கு வெறும் 9 ஓட்டங்கள் மாத்திரம் தேவை என்ற நிலையில், சென்னை அணி துடுப்பெடுத்தாட, மாலிங்க பந்து வீசினார். இந்த ஓவரை அபாரமாக வீசிய மாலிங்க 7 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்ததுடன், இறுதிப் பந்தில் விக்கெட்டினை வீழ்த்தி மும்பை அணிக்கு கிண்ணத்தை பெற்றுக்கொடுத்தார்.

இந்த ஓவரில் அவர் பந்து வீசிய விதத்தை விடவும், அவரது பந்து வீச்சு வேகம் அதிகமாக பேசப்பட்டிருந்தது. குறிப்பாக, மணித்தியாலத்துக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் பந்து வீச தடுமாறிய இவர், இந்த இறுதி ஓவரில் தொடர்ச்சியாக முதல் 5 பந்துகளையும் 140 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் வீசியிருந்தார். முறையே 142, 143, 142, 141 மற்றும் 140 என்ற வேகத்தில் பந்துகளை வீசியதுடன், இறுதிப்பந்தினை 112 கிலோமீற்றர் வேகத்தில் வீசியிருந்தார்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதவுள்ள சென்னை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (10) நடைபெற்ற சென்னை சுப்பர்……

இதில் நேர்த்தியான யோர்க்கர் பந்துகளை வீசிய இவர், துடுப்பாட்ட வீரர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தார். இவ்வாறு மாலிங்க அவருடைய பந்து வீச்சின் வேகத்தை அதிகரித்துள்ளதுடன், முன்னர் போன்று யோர்க்கர் பந்துகளை வீசுவது இலங்கை இரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இம்மாத இறுதியில் உலகக் கிண்ணம் ஆரம்பமாகும் நிலையில், லசித் மாலிங்க வேகமாக பந்து வீச ஆரம்பித்திருப்பது இலங்கை அணிக்கு மேலும் பலத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, மிதவேகத்தில் பந்து வீசுவதையும், மிதவேக பௌன்சர்களை வீசுவதையும் மாலிங்க சிறப்பாக செய்து வருகின்றார். இவ்வாறான தருணத்தில் அவரால் 140 இற்கும் அதிகமாக வேகத்தில் பந்து வீச முடியும் என்றால், உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் பந்து வீச்சு மேலும் பலமடையும் என கிரிக்கெட் ஆர்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<