IPL வர்ணனையாளர் குழுவில் இடம்பிடித்த ரஸல் ஆர்னல்ட்

Indian Premier League 2022

438

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மற்றும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் இந்த ஆண்டு IPL தொடரில் வர்ணனையாளராக செயற்பட உள்ளனர்.

இதில் ரவி சாஸ்திரி 7 ஆண்டுகளுக்குப் பிறகும், சுரேஷ் ரெய்னா, பியூஸ் சவ்லா, தவால் குல்கர்னி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் முதல் தடவையாகவும் IPL தொடரின் வர்ணனையாளராக பணியாற்றவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15 ஆவது அத்தியாயம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில். இம்முறை IPL தொடரில் பணியாற்றவுள்ள ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளுக்கான 85 பேர் கொண்ட வர்ணனையாளர் குழுவை Star Sports தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி IPL கிரிக்கெட்டில் மீண்டும் வர்ணனையாளர் பணியில் இணைந்து கொள்ளவுள்ளார். அவர் இம்முறை ஹிந்தி மொழியில் வர்ணனை செய்யவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது தொடர்பில் ரவி சாஸ்திரி கூறும்போது, ‘மீண்டும் தொலைக்காட்சியில் வருவது புத்துணர்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை, IPL கிரிக்கெட்டின் தரத்தைப் பற்றியது மற்றும் ஒலி வாங்கியின் பின்னால் அமர்ந்து போட்டிகளை நெருக்கமாகப் பார்ப்பது உற்சாகமானது.

இது IPL தொடரின் 15 ஆவது அத்தியாயமாகும். நான் முதல் 11 ஆண்டுகள் வர்ணனையில் இருந்தேன். பிறகு பிசிசிஐ இன் முட்டாள்தனமான ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விதிமுறையினால் இழந்தேன், இதனால் கடைசி சில பருவங்களில் வர்ணனையாற்ற முடியவில்லை’ என்றார்.

இதனிடையே, இந்த ஆண்டு IPL மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் ஹிந்தி வர்ணனைக் குழுவில் இணைந்துள்ளார்.

அதேபோன்று, முன்னாள் இலங்கை வீரரும், நட்த்திர வர்ணனையாளருமான ரஸல் ஆர்னல்ட் இம்முறை IPL தொடரில் தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IPL வர்ணனைக் குழு விபரம்

  • ஆங்கிலம் – ஹர்ஷா போக்ளே, சுனில் கவாஸ்கர், சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், தீப் தாஸ்குப்தா, அஞ்சும் சோப்ரா, இயன் பிஷொப், ஆலன் வில்கின்ஸ், எம்பேங்வா, நிகோலஸ் நைட், டேனி மொரிஸன், சைமன் டுல், மெத்திவ் ஹேடன், கெவின் பீட்டர்சன்
  • ஹிந்தி – ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், கௌதம் கம்பீர், பார்தீவ் படேல், நிகில் சோப்ரா, தன்யா புரோஹித், கிரன் மோரே, ஜதின், சுரேன் சுந்தரம், சுரேஷ் ரெய்னா.
  • தமிழ் – பாவனா பாலகிருஷ்ணன், முத்துமாறன் ஆர், ராதகிருஷ்ணன் ஸ்ரீனிவாசன், கேவி சத்நாராணயனன், ஆர்.ஜே பாலாஜி, விஷ்ணு ஹரிஹரன், எஸ் பத்ரிநாத், அபினவ் முகுந்த், கே ஸ்ரீகாந்த், யோமகேஷ் விஜயகுமார், ஆர் சதீஷ், ரஸல் ஆர்னல்ட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<