ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதவுள்ள சென்னை

357
Image Courtesy - IPLT20.COM

ஐ.பி.எல். தொடரில் நேற்று (10) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது குவாலிபையர் (qualifier) போட்டியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

த்ரில் வெற்றியுடன் சென்னையை சந்திக்கவுள்ள டெல்லி அணி

ஐ.பி.எல். தொடரில் நேற்று (08) நடைபெற்ற…

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமான ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டது.

எனினும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய பந்து வீச்சு பலத்தைக்கொண்டு டெல்லி அணியை கட்டுப்படுத்தியது. கடந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறத் தவற, கொலின் மன்ரோ ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய அணித் தலைவர் ஸ்ரேயாஷ் ஐயர் விக்கெட்டினை பறிகொடுக்க, ரிஷப் பண்ட் மாத்திரம் இறுதிவரை போராடி அணிக்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இறுதி, ஓவரில் இஷான் சர்மா மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் இறுதி ஓவரில் பெற்றுக்கொடுத்த 16 ஓட்டங்களுடன் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ஓட்டங்களையும், கொலின் மன்ரோ 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில், ரவீந்திர ஜடேஜா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின்னர், 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள், டெல்லி அணியின் மோசமான களத்தடுப்பினை பயன்படுத்திக்கொண்டு ஓட்டங்களை குவித்தனர். இதன்படி, முதல் விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை வொட்சன் மற்றும் பாப் டு ப்ளெசிஸ் பெற்றுக்கொடுத்தனர். டு ப்ளெசிஸ் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, வொட்சனும் அரைச்சதம் கடந்தார்.

இவர்கள் இருவரின் அரைச்சதம், அம்பத்தி ராயுடு பெற்றுக்கொடுத்த 20 ஓட்டங்கள் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் 11 ஓட்டங்கள் உள்ளடங்கலாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பந்து வீச்சில், ட்ரென்ட் போல்ட் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

இதேவேளை, நேற்றைய தினம் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நாளை (12) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அத்துடன், இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் 3 தடவைகள் ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

டெல்லி கெப்பிட்டல்ஸ் – 147/9 (20) – ரிஷப் பண்ட் 38 (25), கொலின் மன்ரோ 27 (24), ரவீந்திர ஜடேஜா 23/3, டெரன் பிராவோ 19/3

சென்னை சுப்பர் கிங்ஸ் – 151/4 (19) – ஷேன் வொட்சன் 50 (32), பாப் டு ப்ளெசிஸ் 50 (39), ட்ரென்ட் போல்ட் 20/1

முடிவு – சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<