திசர பெரேராவின் அதிரடி வீண்; ஜிம்பாப்வே அணிக்கு த்ரில் வெற்றி

1077

பங்களாதேஷில் இடம்பெறும் முக்கோண ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியாக இடம்பெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி இலங்கை அணியை 12 ஓட்டங்களால் வீழ்த்தி விறுவிறுப்பு வெற்றியொன்றினை பதிவு செய்துள்ளது.

[rev_slider LOLC]

தற்போது பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு பங்களாதேஷ், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கெடுக்கும் முக்கோண ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றது. அந்த வகையில் இலங்கை அணி ஜிம்பாப்வேயுடன் மோதும் போட்டி டாக்கா மிர்பூரில் ஆரம்பமாகியிருந்தது.

ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை இளையோர் அணி

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானிடம்….

நாணய சுழற்சிக்கு அமைய அஞ்செலோ மெதிவ்ஸ் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தார். மெதிவ்ஸ் இலங்கையின் தலைமை பொறுப்பை மீண்டும் எடுத்துக் கொண்ட பின்னர் விளையாடும் முதல் போட்டியாக இது அமைந்திருந்தது.

அத்தோடு இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க அவரது பொறுப்பை ஏற்றதன் பின்னர்  இலங்கை விளையாடும் முதல் போட்டியும் இதுவாகும். இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிது ஹஸரங்க ஆகியோர்  உள்ளடக்கப்பட்டிருந்ததோடு விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியைத் தழுவிய ஜிம்பாப்வே நல்ல முடிவுகளை எதிர்பார்த்த வண்ணம் துடுப்பாட களமிறங்கியது.

ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஹமில்டன் மசகட்சா மற்றும் சோலமன் மிர் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை தந்தனர். போட்டியின் முதல் பத்து ஓவர்களுக்குள் எந்தவித விக்கெட்டுக்களையும் இலங்கை அணி வீரர்களால் கைப்பற்ற முடியவில்லை.

இப்படியாக ஜிம்பாப்வே வலுப்பெற்று முன்னேறிக்கொண்டிருந்த நிலையில் போட்டியின் 13 ஆவது ஓவரை வீசிய திசர பெரேரா இலங்கை அணிக்கு மிகவும் தேவையாக காணப்பட்ட அவ்வணியின் முதல் விக்கெட்டினை கைப்பற்றினார். இதனால் சோலமன் மிர் 34 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்காக பங்களாதேஷுக்கு அழைப்பு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட்….

ஜிம்பாப்வே தனது இரண்டாம் விக்கெட்டையும் சிறிது நேரத்தில் பறிகொடுத்தது. இதனால் அவ்வணி ஒரு கட்டத்தில் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தினை காட்டியது. எனினும், ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹமில்டன் மசகட்சா, ப்ரன்டன் டைலருடன் இணைந்து அணியை மீட்டார்.

இவ்வாறு 57 ஓட்டங்களை மூன்றாம் விக்கெட்டுக்கு பகிர்ந்த நிலையில் ஜிம்பாப்வே அணியின் மூன்றாம் விக்கெட்டாக மசகட்சா ஆட்டமிழந்தார். 32ஆவது ஒரு நாள் அரைச் சதத்தினை பூர்த்தி செய்த அவர் ஆட்டமிழக்கும் போது 83 பந்துகளுக்கு 10 பௌண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 73 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சிறிது நேரத்தில் ப்ரன்டன் டைலரும் 38 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

இப்படியான நிலையில் ஐந்தாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக வந்த சிக்கந்தர் ராசா வேகமான முறையில் துடுப்பாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். சிக்கந்தர் ராசா பெற்றுக்கொண்ட அதிரடி அரைச்சதத்தோடு ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

தனது 10ஆவது ஒரு நாள் அரைச்சதத்தை இப்போட்டி மூலம் கடந்த ராசா ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டத்தில் 67 பந்துகளுக்கு 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக மொத்தமாக 81 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் அசேல குணரத்ன 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், முன்னாள் தலைவர் திசர பெரேரா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட சவாலான 291 ஓட்டங்களை பெறுவதற்கு இலங்கை சார்பான முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தினை காட்டியிருந்தனர்.

எனினும், ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்திருந்த குசல் ஜனித் பெரேரா அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்சுடன் இணைந்து மூன்றாம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் (85) ஒன்றினை வழங்கி போட்டியினை இலங்கையின் பக்கம் வைத்திருந்தார். தொடர்ந்து அதிரடியான முறையில் அரைச்சதம் கடந்த குசல் ஜனித் பெரேராவின் விக்கெட் சிக்கந்தர் ராசாவின் சுழலில் பறிபோனது. குசல் பெரேரா தனது 9 ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் மொத்தமாக 80 பந்துகளில் 83 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

பெரேராவினை அடுத்து அஞ்செலோ மெதிவ்சும் 42 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். இதனால் இலங்கை அணிக்கு அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. இப்படியானதொரு நிலையில் தினேஷ் சந்திமால் இலங்கை அணிக்கு சற்று விவேகமான முறையில் துடுப்பாடி ஆறுதல் அளித்தார். ஜிம்பாப்வே வீரர்கள் சந்திமாலின் விக்கெட்டினையும் 34 ஓட்டங்களுடன் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் அசேல குணரத்னவும் சோபிக்கத் தவறியிருந்தார். இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 196 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இத்தருணத்தில் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுடன் ஜோடி சேர்ந்த திசர பெரேரா அதிவிரைவாக பெளண்டரிகள், சிக்ஸர்கள் என விளாசி போட்டியின் போக்கினை இலங்கை அணிக்கு சாதகமாக மாற்றியிருந்தார். பெரேராவின் அதிரடி ஆட்டத்தினால் இலங்கை அணி இலக்கை வெகுவாக நெருங்கியிருந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் கன்னி டெஸ்ட் போட்டிக்கான திகதி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த வருடம் டெஸ்ட் வரம் பெற்றுக்கொண்ட…..

இந்நிலையில் பெரேரா இலங்கை அணியின் 9ஆவது விக்கெட்டாக துரதிஷ்டவசமாக ஓய்வறை நடந்தார். இவரின் விக்கெட்டினை அடுத்து போட்டி விறுவிறுப்பாக அமைந்த போதிலும் தென்டாய் சட்டாரா இலங்கையின் இறுதி விக்கெட்டினையும் கைப்பற்ற 48.1 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் திசர வெறும் 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களினை குவித்திருந்ததுடன், ஜிம்பாப்வே அணிக்கெதிராக இலங்கை வீரர் ஒருவர் ஒரு நாள் போட்டிகளில் பெற்ற அதிவேக அரைச்சதத்தினையும் பதிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளரான தென்டாய் சட்டாரா 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், கைல் ஜார்விஸ், அணித்தலைவர் கிரேம் கிரீமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியும் தமது தரப்பின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஜிம்பாப்வே அணியின் சகலதுறை வீரர் சிக்கர் ராசாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் அணி இத்தொடரில் அடுத்ததாக பங்களாதேஷ் அணியினை வெள்ளிக்கிழமை (19) எதிர்கொள்கின்றது.

போட்டியின் ஸ்கோர்  விபரம்

முடிவு – ஜிம்பாப்வே அணி 12 ஓட்டங்களால் வெற்றி