MCC இன் தலைவராக குமார் சங்கக்கார

1084

கிரிக்கெட் விளையாட்டின் சட்ட திட்டங்களை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) அடுத்த தலைவராக இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரமான குமார் சங்கக்கார நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு குமார் சங்கக்கார, மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறும் முதல் பிரித்தானியர் அல்லாத நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 ஆம் ஆண்டில் சங்கக்காரவிற்கு மெரில்போன் கிரிக்கெட் கழகம் ஆயுட்கால உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தது. அத்தோடு, சங்கக்கார  இந்த கழகத்தினுடைய உலக கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் அங்கத்துவராகவும் இருந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரிலிருந்து அனைத்து ஆஸி. வீரர்களும் வெளியேற்றம்

உலகக்கிண்ண தொடருக்கான ஆஸி. குழாமில் இடம்பெற்ற வோர்னர், ஸ்மித்…

மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் பதவியினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொறுப்பேற்கவுள்ள குமார் சங்கக்கார, 2020 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் வரை அதன் தலைவராக கடமையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறுவது தொடர்பில் பேசிய சங்கக்கார அதனை மிகப் பெரிய கெளரவங்களில் ஒன்றாக கருதுவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் கூறியதாவது, “மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் அடுத்த தலைவராக பெயரிடப்பட்டதை கெளரவமாக கருதுகின்றேன். (எனக்கு கிடைக்கவிருக்கும்) இந்த பொறுப்பினை சிறப்பாக செய்ய எதிர்பார்த்திருக்கின்றேன்.

எனக்கு, மெரில்போன் கிரிக்கெட் கழகம் உலகின் சிறந்த கிரிக்கெட் கழகமாக உள்ளது, உலகம் பூராகவும் இதனது பரந்த விரிவினால் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ வளர்ச்சி பெற்றுக்கொண்டே வருகின்றது. இதேநேரம் 2020 ஆம் ஆண்டும் குறிப்பாக லோர்ட்ஸில் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த மற்றுமொரு ஆண்டாக அமையவுள்ளது. நான் இதன்  எதிர்காலத்திற்கு இதன் தலைவராக செயற்பட்டு ஆதரவு வழங்குவதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.

லண்டனின் லோர்ட்ஸ் பகுதியில் 1787 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மெரில்போன் கிரிக்கெட் கழகம் கிரிக்கெட் விளையாட்டினுடைய விதிமுறைகளை முதல் தடவையாக உருவாக்கியதோடு, இந்த கழகம் உருவாக்கிய கிரிக்கெட் விதிமுறைகளையே சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC)  பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<