தற்போது இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் தொடர்ந்து மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியதன் காரணமாக, பாகிஸ்தான் அணியிலிருந்து அதன் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் சயீம் அய்யூப் விடுவிக்கப்பட்டுள்ளார்.
>>பாகிஸ்தான் டெஸ்ட் அணியிலிருந்து ஷான், சாஜித் மற்றும் நோமன் நீக்கம்<<
இடதுகைதுடுப்பாட்ட வீரரான இவர், இந்த தொடரில் விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களில் முறையே 6, 8 மற்றும் 7 ஓட்டங்களை எடுத்து ஏமாற்றமளித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 24 வயதான சயீம் அய்யூப் தனது துடுப்பாட்டத்தினை சரிசெய்ய உள்நாட்டு கிரிக்கெட்டுக்குத் திரும்ப விரும்புவதாக தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹேஸனிடம் கலந்துரையாடியிருப்பதாக கூறப்படுகின்றது.
“சயீமின் முடிவை மதித்தும், அவரது இப்போதைய போர்ம் குறித்த அவரது வெளிப்படையான சுயமதிப்பீட்டைப் பாராட்டியும், அணி நிர்வாகமும் தெரிவுக்குழுவும் அவரது கோரிக்கையை ஒப்புக்கொண்டுள்ளன” என்று சயீம் அய்யூப் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சயீம் அய்யூபின் பிரதியீடாக மற்றுமொரு ஆரம்பவீரரான சஹிப்சதா பர்ஹான் பாகிஸ்தான் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் இந்த முத்தரப்பு தொடரில் தனது முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, இன்று (27) பாகிஸ்தான் இலங்கையினை லாஹூரில் வைத்து எதிர்கொள்கின்றது.






















