இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான 14 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரிலிருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் அணித்தலைவராகச் செயல்பட்ட ஷான் மசூத் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 37 வயதான மசூத், பாகிஸ்தானின் உள்ளூர் தொடரான பிரசிடென்ட்ஸ் கிண்ண தொடரின் போது ஏற்பட்ட சிறு காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதியைப் பெற போராடி வருகிறார். அத்துடன், சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் அவர் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்தவில்லை. அந்தத் தொடரின் நடுவே அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. மசூத் அணியில் இடம்பெறாததற்கான காரணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தனது செய்திக்குறிப்பில் குறிப்பிடவில்லை.
இங்கிலாந்து தொடரின் போது தேர்வுக்குழு மேற்கொண்ட அதிரடி மாற்றங்களின் தாக்கம் பாகிஸ்தானின் உள்ளூர் தொடர் வரையிலும் தொடர்கிறது. அந்தத் தொடரின் இடையே திருப்பி அழைக்கப்பட்டு பாகிஸ்தானில் தேசிய இணையக் குற்றப் புலனாய்வு முகவர் நிலைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மொஹமட் ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோருக்கும் இந்த டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் பாகிஸ்தான் தேர்வாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த அப்துல்லா ஷபிக்கின் சிறப்பான காலமும் முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து தொடரில் கடும் சரிவைச் சந்தித்த அவர், கடந்த வாரம் நடைபெற்ற முதல்தரப் போட்டியில் 185 ஓட்டங்கள் குவித்தபோதிலும், அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள அது போதுமானதாக அமையவில்லை.
- பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகும் பெதும் நிஸ்ஸங்க
- குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை டெஸ்ட் குழாம் வெளியீடு
இதனிடையே, இங்கிலாந்து தொடரின் நடுவே நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட சல்மான் ஆகா, பாகிஸ்தான் உள்ளூர் போட்டிக்குத் திரும்பி முச்சதம் விளாசியதைத் தொடர்ந்து மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி திடீரென திரும்ப அழைக்கப்பட்ட அலி உஸ்மானும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவராவார்.
சுழல்;பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை பாகிஸ்தான் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து, சாஜித் கான் மற்றும் நோமன் அலி ஆகிய இருவருமே இல்லாத ஒரு டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இங்கிலாந்து சென்ற சாஜித் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை என்றாலும், உள்ளூர் ஆடுகளங்களில் இவர்களது பந்துவீச்சுத் திறமைக்காகவே இருவரும் அணியின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தனர். இம்முறை அலி உஸ்மானுடன், தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் மூலம் கவனத்தைப் பெற்றுள்ள சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரர் அராபத் மின்ஹாஸ் இணைந்துள்ளார்.
மறுபுறத்தில் அவரது தம்பியும், முன்வரிசை துடுப்பாட்ட வீரருமான சமீர் மின்ஹாஸ் அணியில் அறிமுகமாகியுள்ளார். அதுமாத்திரமின்றி, பிரசிடென்ட்ஸ் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த மொஹமட் தாஹா மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் மொஹமட் சுலைமான் ஆகியோரும் டெஸ்ட் அணிக்கு அழைப்புப் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் தற்போது 14 வீரர்கள் கொண்ட அணியை மட்டுமே அறிவித்துள்ளதுடன், மேலும் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படவுள்ளனர். தற்போதைக்கு மொஹமட் அப்பாஸ் மற்றும் இங்கிலாந்து தொடரின் 3ஆவது டெஸ்டில் தனது சகலதுறை திறமையால் அசத்திய ரஸாவுல்லா ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சிப் போட்டிக்கு பிறகே எஞ்சிய இரு வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்த முடிவு எடுக்கப்படும்.
இதேவேளை, இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டின் போது இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற மைக் ஹஸன் தொடர்ந்து அப்பொறுப்பில் நீடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 9 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறும்.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம்: பாபர் அசாம் (அணித்தலைவர்), அப்துல்லா ஃபசல், அலி உஸ்மான், அராபத் மின்ஹாஸ், அசான் அவைஸ், மொஹமட் அப்பாஸ், மொஹமட் காசி கோரி (விக்கெட் காப்பாளர்), மொஹமட் சுலைமான், மொஹமட் தாஹா, ரஸாவுல்லா, சாத் பெய்க் (விக்கெட் காப்பாளர்), சல்மான் அலி ஆகா, சமீர் மின்ஹாஸ், சௌத் ஷகீல்






















