அசத்தல் ஆட்டத்தால் மாலைத்தீவுகளை சமன் செய்த இலங்கை

2357
Image Courtesy - Maldives National Football Team

முன்னணி வீரர்களைக் கொண்ட மாலைத்தீவுகள் அணியை சிறந்த முறையில் எதிர்கொண்ட இலங்கை கால்பந்து அணி, சாப் சுசுகி கிண்ணத்தின் தமது குழு மட்ட இறுதிப் போட்டியை எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் முடித்துக்கொண்டது.

பங்களாதேஷின் பங்கபந்து தேசிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் அபாரமான பந்துப் பரிமாற்றம் மற்றும் சிறந்த தடுப்பாட்டத்தை மேற்கொண்ட போதும், சிறந்த வாய்ப்புக்களை தவறவிட்டமையினால் வெற்றிக்கான வாய்ப்பைத் தவறவிட்டனர்.

SAFF முதல் மோதலில் பலம் மிக்க இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை

பங்களாதேஷின் பங்கபந்து தேசிய அரங்கில் இடம்பெற்ற சாப் (SAAFF) சுசுகி….

இந்தத் தொடரில் தமது முதல் போட்டியாக இந்தியாவுடன் நடந்த மோதலில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்த நிலையிலேயே இலங்கை அணி இந்த மோதலில் களம் கண்டது. இந்தியாவுடனான போட்டியில் விளையாடிய முதல் பதினொருவரில் இருந்து 3 வீரர்கள் இன்றைய போட்டிக்காக அணியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய வீரர்கள் மூவர் உள்வாங்கப்பட்டனர்.  

இதன்படி, அணியின் தலைவர் சுபாஷ் மதுஷான், மத்தியகள வீரர் மொஹமட் ரிப்னாஸ் மற்றும் சஜித் குமார ஆகியோருக்குப் பதிலாக ஹர்ஷ பெர்னாண்டோ, டிலான் கௌஷல்ய மற்றும் இளம் முன்கள வீரர் அசேல மதுஷான் ஆகியோர் இன்றைய முதல் பதினொருவருக்காக களமிறக்கப்பட்டனர்.

இலங்கை முதல் பதினொருவர்

சுஜான் பெரேரா (தலைவர்), அனுருந்த வரகாகொட, டக்சன் பியுஸ்லஸ், ஷரித்த ரத்னாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ, அசிகுர் ரஹ்மான், டிலான் கெளஷல்யா, அசேல மதுஷான், கவிந்து இஷான், பசால் மொஹமட், அபீல் மொஹமட்

மாலைத்தீவுகள் முதல் பதினொருவர்

மொஹமட் பைசல், அப்துல் கானி, மொஹமட் முஜுதாஸ், அலி சமூஹ், சிபாஹு யூசுப், அலி பாசிர், ஹம்தான் மொஹமட், மொஹமட் இருபான், வாஹித் ஹசன், மொஹமட் ஆரிப்

போட்டி ஆரம்பித்து 3ஆவது நிமிடத்தில் மாலைத்தீவுகள் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை அவ்வணியின் சக வீரர் ஒருவர் கோலுக்குள் ஹெடர் செய்தார். அதனை இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா தட்டிவிட, இலங்கை பின்கள வீரர்கள் பந்தை அங்கிருந்து வெளியேற்றினர்.

மீண்டும், 15ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் பெனால்டி எல்லைக்கு வெளியே மைதானத்தின் இடதுபுறத்தில் மாலைத்தீவுகள் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது அவர்கள் கோல் நோக்கி உதைந்த பந்து, தடுப்புக்கு வந்த சுஜான் பெரேராவின் உடம்பிற்கு கீழால் சென்று கோலின் இடதுபுற கம்பத்தில் பட்டு திசை திரும்பியது.

22ஆவது நிமிடம் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் கோலுக்கு நேர் எதிரே இருந்து மாலைத்தீவுகள் அணி வீரர் பெற்ற ப்ரீ கிக்கிபோது, கோல் நோக்கி வந்த பந்தை சுஜான் சிறந்த முறையில் பாய்ந்து வெளியே தட்டி விட்டார்.

தவறுகளை திருத்தி பலமான அணியாக மாலைத்தீவுகளை எதிர்கொள்வோம் : பகீர் அலி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 2018ஆம் ஆண்டுக்கான சாப் சுசுகி கிண்ணத்தில்….

அடுத்த நிமிடம், எதிரணியின் கோலுக்கு அண்மையில் இலங்கை வீரர்களிடையே நிகழ்ந்த சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் இளம் வீரர் அசேல மதுஷான் கோல் காப்பாளரையும் தாண்டி பந்தை வலைக்குள் செலுத்தினார். எனினும், நடுவர் அதனை ஓப் சைட் என அறிவிக்க இலங்கையின் சிறந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

மேலும் 3 நிமிடங்களில் மாலைத்தீவுகள் முன்கள வீரர் இலங்கை கோல் எல்லையில் பந்தை தனியே உள்ளெடுத்து வந்து கோலுக்கு முயற்சிக்கையில் சுஜான் வேகமாக முன்னே வந்து பந்தை தடுத்துப் பற்றிக்கொண்டார்.  

போட்டியின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் கோல் எல்லையில் இருந்த இலங்கை வீரர் டிலான் கௌஷல்ய தனக்கு வந்த பந்தை அபீல் மொஹமடுக்கு தட்டிவிட, அபீல் கோல் நோக்கி உதைந்த பந்து மிக உயர்ந்து வெளியே சென்றது.

இதனால், இலங்கை அணியின் கோல் வாய்ப்பு ஓப் சைட் சைகையினால் பறிபோக, முதல் பாதியாட்டம் கோல்கள் எதுவும் இல்லாமல் நிறைவுற்றது.

முதல் பாதி: இலங்கை 0 – 0 மாலைத்தீவுகள்  

இரண்டாவது பாதியின் முதல் முயற்சியாக மாலைத்தீவுகள் அணியின் ஒரு பக்க கோணர் திசையில் இருந்து பசால் உள்ளனுப்பிய பந்தை அசிகுர் ரஹ்மான் பெனால்டி எல்லைக்குள் இருந்து கோல் நோக்கி உதைந்தார். எனினும், அவரது காலில் சிறந்த முறையில் பந்து படாமையினால் மற்றொரு முயற்சி வீணாகியது.

இரண்டாவது பாதியின் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கை அணியின் பெனால்டி எல்லையில் ஒரு திசையில் இருந்து மாலைத்தீவுகள் அணி வீரர் வழங்கிய பந்தை இறுதித் தருவாயில் சக அணி வீரர் கோலுக்குள் செலுத்த முயற்சியின்போது பந்து அவரது காலில் படாமல் வெளியேறியது.

ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து அசிகுர் ரஹ்மான் பந்தை கோல் நோக்கி மிக நீண்ட தூரம் உதைந்தபோது மாலைத்தீவுகள் கோல் காப்பாளர் மொஹமட் பைசல் மிகவும் சிறந்த முறையில் பாய்ந்து பந்தைப் பிடித்தார்.

அடுத்த நிமிடம் மீண்டும் பசால் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தையும் கோல் காப்பாளர் பைசல் சிறந்த முறையில் பாய்ந்து பற்றிக்கொண்டார்.  

போட்டியின் 80 நிமிடங்கள் கடந்த நிலையில் கவிந்து இஷான் மற்றும் அசேல மதுஷான் இடையிலான பந்துப் பரிமாற்றத்தின் பின்னர் அசேல எதிரணியின் கோல்வரை பந்தை எடுத்துச் சென்று உதைந்த பந்தை கோல் காப்பாளர் பைசல் மறைக்க மீண்டும் கவிந்து இஷான் கோலுக்கான முயற்சியை மேற்கொண்டார். அதனையும் வேகமாக செயற்பட்ட பைசல் தடுத்து இலங்கை அணியின் அடுத்தடுத்த கோல் வாய்ப்புக்களை முறியடித்தார்.

அடுத்த நிமிடம் மீண்டும் கவிந்து இஷான் கோலுக்காக எடுத்த முயற்சியையும் சிறப்பாக செயற்பட்ட பைசல் தடுத்தார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் தமது ஆட்டத்தை வேகமாக்கிய இலங்கை அணியினர், மாலைத்தீவுகளின் தடுப்புக்களைத் தாண்டி கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவற்றினால் பயன்பெறவில்லை.

போட்டியின் இறுதி நிமிடங்கள் மிகவும் விறுவிறுப்படைய அரங்கும் பரபரப்பானது. எனினும், இறுதிவரை கோல்கள் பெறப்படாமையினால் ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது.

இறுதியாக, கடந்த 2013ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் அணியை சந்தித்திருந்த இலங்கை அணி 10–0 என படுதோல்வியடைந்திருந்தது. எனவே, இந்த முடிவானது இலங்கை கால்பந்து அணியின் மீள் எழுச்சிக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

முழு நேரம்: இலங்கை 0 – 0 மாலைத்தீவுகள்

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

இலங்கை – அநுருந்த வரகாகொட 53′, கவிந்து இஷான் 73′  

இலங்கை அணியின் மாற்றங்கள்

43ஆம் நிமிடம் – டிலான் கௌஷல்யா வெளியே, சசன்க தில்ஹார உள்ளே

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<