கட்டாய வெற்றிக்காக நேபாளத்துடன் மோதவுள்ள இலங்கை

SAFF Championship 2021

300

தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் தோல்வி கண்ட இலங்கை வீரர்கள், தமது இரண்டாவது போட்டியில் கட்டாய வெற்றியொன்றை பெற வேண்டிய நிலையில் நேபாளம் அணியை திங்கட்கிழமை (04) எதிர்கொள்ளவுள்ளது.

இதன்படி ஏற்கனவே, போட்டியை நடத்தும் மாலைதீவுகள் அணியை தமது முதல் லீக் போட்டியில் வெற்றி கொண்ட உத்வேகத்துடன் நேபாளம் அணி இலங்கை நேரப்படி திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு இடம்பெறும் தமது அடுத்த போட்டியில் இலங்கை அணியை எதிர்த்தாடவுள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தவரை பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அணியில் வீரர்களின் நிலையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டமை சிறந்த ஒரு போட்டியைக் காண்பிப்பதற்கு பிரதான தடையாக இருந்தது. எனவே, அடுத்த போட்டி சில மாற்றங்கள் செய்யப்பட்டு வீரர்கள் முன்னைய போட்டியை விட முழுமையான ஒரு வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கட்டாயம்

நேபாளம் – இலங்கை இடையிலான போட்டி முடிவுகள்

மோதியுள்ள போட்டிகள் – 17

இலங்கை வெற்றி – 06

நேபாளம் வெற்றி – 03

சமநிலை – 08

கடந்த கால மோதல்களைப் பார்க்கின்றபோது இலங்கை அணியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. எனினும், நேபாளம் அணி அண்மைக்காலமக மிக வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் அணியாக காணப்படுகின்றது.

இலங்கை அணி

இலங்கை அணிக்கு இந்தப் போட்டி மிகவம் சவால்மிக்க போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே, நட்புறவுப் போட்டியோ, சிறந்த ஒரு அணியுடன் பயிற்சி ஆட்டமோ இல்லாமல் இந்த தொடருக்கு வந்திருக்கும் இலங்கை அணிக்கு, முதல் போட்டியில் வீரர்களின் நிலைகளில் ஏற்படுத்திய மாற்றம் கைகூடாமல் போனது.

ஷலன ஷமீர

குறிப்பாக, இதற்கு முன்னர் பின் களத்தில் சிறந்த திறமையைக் காண்பித்து வந்த ஷலன ஷமீர, இறுதியாக இடம்பெற்ற போட்டியில் மத்திய களத்தில் விடப்பட்டமை இலங்கை பயிற்றுவிப்பாளர்கள் மேற்கொண்ட மிகப் பெரிய பிழையாகப் பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, இங்கிலாந்தில் கழக மட்டத்தில் மத்திய களத்தில் சிறப்பான ஆட்டம் காண்பிக்கும் மார்வின் ஹமில்டன் முன் களத்தில் விளையாடியமையும் இலங்கை அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தவில்லை.

Embed below links

மறுமுனையில் பங்களாதேஷ் அணியுடன் 5 பின்கள வீரர்களையும், மத்திய களத்தில் 2 வீரர்களையும், முன்களத்தில் 3 வீரர்களையும் பரீட்சித்துப் பார்த்த இலங்கை அணிக்கு, குறித்த முறைமை வெற்றியளிக்காத நிலையில், இந்தப் போட்டியில் மாற்றம் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும்.

அவதானிக்கப்பட வேண்டியவர்கள்

இலங்கை அணியின் பின்களத்தின் மத்தியில் ஆடும் சிரேஷ்ட வீரர் டக்சன் பியுஸ்லஸ் இறுதிப் போட்டியில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையினால் அவருக்கு அடுத்த போட்டியில் விளையாட முடியாது. எனவே, அவரது இடத்தை நிரப்பும் வகையில் மற்றொரு சிரேஷ்ட வீரராக ஷரித்த ரத்னாயக்கவிற்கு பின்களத்தில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவரோடு, ஷலன ஷமீரவும் பின் களத்தின் வலது அல்லது இடது பக்கத்தில் களமிறக்கப்படும் பட்சத்தில் அவரது பயனையும் முழுமையாக இலங்கை அணிக்கு பெறலாம்.

ஷரித்த ரத்னாயக்க

முதல் போட்டியில் இலங்கை அணி கோலுக்கான முயற்சிகளை அதிகம் எடுக்காவிட்டாலும் முன்கள வீரர் வசீம் ராசிக் அனைவராலும் அதிகம் அவதானிக்கப்பட்டார். எனவே, நேபாள வீரர்களும் அவரை தடுக்கும் முயற்சியில் அதிகம் ஈடுபடுவர். எனவே, முன்களத்தில் மேலும் வேகத்தை அதிரிக்க மொஹமட் ஆகிப் போன்ற வீரரை பயன்படுத்தினால் இலங்கைக்கு கோலுக்கான முயற்சிகளை அதிகரிக்கலாம்.

இந்தப் போட்டியில் இலங்கை அணி அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதியாக மத்திய களம் இருக்கின்றது. இலங்கை முன்களத்தில் வசீம், கவிந்து இஷான் போன்ற வேகமான வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சிறந்த முறையில் பந்துப் பரிமாற்றங்கள் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும். எனவே, சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் கொண்ட பசாலை மத்திய களத்தில் பயன்படுத்த முடியும். இதற்கு மேலதிகமாக எடிசன் பிகுராடோ மற்றும் அமான் பைசர் போன்ற வீரர்களையும் மத்திய களத்தில் பயன்படுத்தலாம்.

இலங்கை அணியின் இறுதி 4 போட்டிகள்

0-1 எதிர் பங்களாதேஷ்

0-5 எதிர் தென் கொரியா

2-3 எதிர் லெபனான்

0-2 எதிர் துர்க்மெனிஸ்தான்

 நேபாளம் அணி

மாலைத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், நேபாளம் வீரர்கள் பந்தை எதிரணியை விட குறைவான அளவே தமது கால்களில் வைத்திருந்தனர். எனினும், தமக்கு கிடைத்த வாய்ப்புக்களின் போது கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் பயனாகவே, 86வது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த மனிஷ் டங்கி மூலம் வெற்றி கோலைப் பெற்றது.

அஞ்சன் பிஸ்தா

எனவே, இலங்கை அணிக்கு எதிராகவும் அவர்கள் கோலுக்கான முயற்சிகளை அதிகம் மேற்கொள்வார்கள். எனவே, பங்களாதேஷ் அணியை விட அதிகமான அழுத்தம் இலங்கைக்கு நேபாள முன்கள வீரர்களால் வரலாம்.

பிபா தரவரிசையில் 168ஆவது இடத்தில் உள்ள நேபாளம் அணி, அண்மையில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தம்மை விட அதிக பலம் கொண்ட அணிகளுடனேயே மோதியிருந்தது.

அதன் பின்னர் இந்தியாவுடன் இரண்டு நட்புறவுப் போட்டிகளில் விளையாடி ஒன்றில் 2-1 என தோல்வி கண்டிருந்த அதேவேளை, மற்றைய போட்டியை 1-1 என சமநிலையில் முடித்துக்கொண்டது.

அவதானிக்கப்பட வேண்டியவர்கள்

குறிப்பாக, எந்த நேரத்திலும் போட்டியின் போக்கை மாற்றக்கூடிய வீரராக உள்ள 23 வயதுடைய அஞ்சன் பிஸ்தா முக்கிய வீரராகப் பார்க்கப்படுவார். இவர், 16 வயதின்கீழ் தேசிய அணியில் இருந்து தொடர்ந்து அந்நாட்டின் இளையோர் தேசிய அணிகளுக்காக ஆடி வந்து, தற்போது பிரதான அணியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இதுவரை 3 கோல்களைப் பெற்றுள்ள அஞ்சன் பிஸ்தாவுக்கு பலமாக, சிரேஷ்ட வீரர் நவயங் ஷிரெஷ்டா இருப்பார்.

கிரன் லிம்பு

இவை அனைத்திற்கும் மேலதிகமாக, நேபாளம் அணியின் கோல் அரணாக இருப்பவர் அணியின் தலைவர் கிரன் லிம்பு. நேபாளம் அணியின் கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் அவ்வணிக்காக விளையாடிய சாதனையை தன்வசம் வைத்துள்ள இவரின் அனுபவம் அணியின் மேலதிக பலனாக உள்ளது.

அணியின் தயார்படுத்தலைப் பார்க்கும்போது, தலைமைப் பயிற்றுவிப்பாளர் அப்துல்லா அல்முடைரி சற்று வித்தியாசமான நுட்பம் கொண்டவர்.  குவைட் நாட்டைச் சேர்ந்த இவர் தமது அணியின் பலத்தை எவ்வாறு பயன்படுத்துவாறோ, அதேபோன்று எதிரணியின் பலவீணத்தினையும் அதிகம் கண்டறியும் ஆற்றல் கொண்டவர். இவர் அணியுடன் இணைந்த பின்னர் வீரர்கள் உளவியில் ரீதியாகவும் உறுதியடைந்துள்ளதாக அணியின் தலைவர் கிரன் லிம்பு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கை அணி முதல் போட்டியில் விட்ட தவறுகளை சரி செய்யாவிட்டால், அதனை நிச்சயம் நேபாளம் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்.

நேபாளம் அணியின் இறுதி 4 போட்டிகள்

1-0 எதிர் மாலைதீவுகள்

2-7 எதிர் ஓமான்

1-2 எதிர் இந்தியா

1-1 எதிர் இந்தியா

இறுதியாக,

இம்முறை SAFF சம்பியன்ஷிப் தொடரைப் பொறுத்தவரையில் அனுவம் மிக்க அணியாகவும், பயிற்சிப் போட்டிகளில் ஆடி தயார்நிலையில் உள்ள அணியாகவும் நேபாளம் இருந்தாலும், இலங்கை அணியில் உள்ள வீரர்களின் திறமையிலும், வேகத்திலும் எந்தவொரு குறையும் இல்லை. எனினும், திட்டங்கள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டு, அந்த திட்டம் களத்தில் குறித்த 90 முதல் 95 நிமிடங்களில் சிறப்பாக செயற்படுத்தப்படும் பட்சத்தில் இலங்கைக்கு இந்த தொடரில் முதல் வெற்றியை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<