தெற்காசிய நீர்நிலைப் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு பங்கேற்க தடை

111

இலங்கை நீர்நிலை சங்கத்தின் (SLASU – Sri Lankan Aquatic Sports Union) நிர்வாகத்தில் நிலவி வருகின்ற சிக்கல்கள் காரணமாக சர்வதேச நீர்நிலை சம்மேளனத்தினால் இலங்கையின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3ஆவது தெற்காசிய நீர்நிலை சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இருந்த 111 இலங்கை வீரர்களின் அனுமதியை இடைநிறுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

3ஆவது தெற்காசிய நீர்நிலை சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இந்தியாவின் பெங்களூர் நகரில் நடைபெறவுள்ளது. நீச்சல், மத்திய மற்றும் நீண்ட தூர நீச்சல் போட்டிகள், முக்குளித்தல் மற்றும் நீர்நிலை பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளுக்காக இம்முறை இலங்கையிலிருந்து 111 பேர் கொண்ட வீரர்கள் குழாம் இந்தியா செல்வதற்கு தயார் நிலையில் இருந்தனர்.   

புளூ ஸ்டார் வீரர்கள் மீது நாவலப்பிடியில் தாக்குதல்

நாவலப்பிடி, ஜயதிலக்க விளையாட்டரங்கில் நேற்று (09) நடைபெற்ற டயலொக்…

எனினும், இலங்கை நீர்நிலை சங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல் மற்றும் முரண்பாடுகள் காரணமாக இலங்கை வீரர்கள் குறித்த போட்டித் தொடரில் பங்குபற்றுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதேநேரம், எந்தவொரு முன்அறிவிப்பும் இன்றி, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இலங்கை நீர்நிலை சங்கத்துக்கு இடைக்கால நிர்வாக சபையொன்று நியமிக்கப்பட்டது. குறித்த நியமனம், சர்வதேச நீர்நிலை சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என இலங்கை நீர்நிலை சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் சர்வதேச நீர்நிலை சங்கத்திடம் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபைக்கு தற்காலிக தடைவிதிக்க சர்வதேச நீர்நிலை சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது.

இதன் பின்னணியில் தான், ஆசிய நீர்நிலை சம்மேளனத்தினால் போட்டிகளை நடத்தும் இந்திய நீர்நிலை சங்கத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த போட்டித் தொடரில் பங்கேற்கவிருந்த இலங்கை வீரர்களின் அனுமதியை இடைநிறுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை நீர்நிலை சங்கத்திற்கு இடைக்கால நிர்வாக சபை நியமிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், இதனால் இலங்கை வீரர்களை இந்த போட்டித் தொடரில் பங்குபற்றச் செய்ய முடியாதெனவும் இந்திய நீர்நிலை சங்கம் அறிவித்துள்ளது. தற்போது வரை இந்தப் பிரச்சினைக்கான இறுதி தீர்வு எட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பத்தாவது அகவையை அடையும் ThePapare.com

இலங்கையின் முதல் தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com…

இதன்காரணமாக, குறித்த போட்டித் தொடரை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு இந்திய நீர்நிலை சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை நீர்நிலை சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த லியனகே கருத்து வெளியிடுகையில், சர்வதேச நீர்நிலை சம்மேளனத்தினால் (FINA – Federation internationale de natation) இதுவரை எமது சங்கத்திற்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை. எனினும், இலங்கை நீர்நிலை சங்கத்தின் இடைக்கால நிர்வாக சபை தொடர்பில் முன்னெடுத்து வருகின்ற விசாரணைகள் முடிவுக்கு வரும்வரை குறித்த போட்டித் தொடரிற்காக இலங்கை வீரர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டுக்கள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யும்படி ஆசிய நீர்நிலை சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

சர்வதேச நீர்நிலை சம்மேளனத்தின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை நீர்நிலை சங்கத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டும் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<