சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய ரொனால்டினோவுக்கு சக வீரர்கள் வாழ்த்து

105

பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ பரகுவே சிறையில் தனது 40 ஆவது பிறந்த தினத்தை கடந்த சனிக்கிழமை (21) கொண்டாடினார். அவருக்கு 2002 உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியின் சக வீரர்கள் சமூக ஊடகத்தின் மூலம் உற்சாகம் மற்றும் பாராட்டை வெளியிட்டனர்.    

போலிக் கடவுச்சீட்டுடன் தென் அமெரிக்க நாடான பரகுவேவுக்குள் நுழைந்ததை அடுத்தே ரொனால்டினோ தனது சகோதரருடன் இம்மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது உயர் பாதுகாப்புக் கொண்ட சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் ஆறு மாதங்கள் வரை சிறை அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு முகம்கொடுத்துள்ளார்

எனினும் சக கைதிகள் அவருடன் நட்புப் பாராட்டி வருவதோடு அவரது பிறந்த நாளை ஒட்டி விசேட ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அவர் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படமும் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஊடாக முன்னாள் சக அணி வீரர்கள் ரொனால்டினோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் சக வீரரான 43 வயது ரொனால்டோ தாமும் ரொனால்டினோவும் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “(நண்பனே) வாழ்த்துகள்! இந்த கடினமான தருணத்தில் இருந்து மீண்டு வந்து அதே உற்சாகத்துடன் எப்போதும் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.  

46 வயதான ரொபார்டோ கார்லோஸ் தாமும் ரொனால்டினோவும் ஆடும் புகைப்படம் ஒன்றுடன் தமது பிறந்த நாள் வாழ்த்தை வெளியிட்டுள்ளார்

ரொனால்டினோவின் பார்சிலோனா அணி சக வீரரான சாமுவேல் எடோவும் இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்தை தெரிவித்துள்ளார்

சகோதரரே, கூறுவதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை. என்ன கூறுவதேன்று தெரியவில்லை. உங்களை எப்படி ஊக்கப்படுத்துவது என்பது பற்றியே நாம் பேசி வருகிறோம்.

நீங்கள் என் நண்பர் சகோதரர். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதிக தைரியத்துடனும் பிரார்த்தனை செய்த வண்ணமும் இருக்கும்படியே என்னால் கூற முடியும்.

இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். ஏனென்றால் நீங்கள் வெளிப்படையாக நல்ல மனிதராகவும் நல்ல நண்பராவும் இருக்கிறீர்கள். இங்கிருந்து உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்பதோடு உங்களுக்குத் தேவையான அனைத்துக்கும் என்னை நம்பலாம்என்று நீண்ட செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்

ரொனால்டினோ கடந்த காலங்களில் தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடி வந்தவர். தனது 26 ஆவது பிறந்த நாளை பார்சிலோனா இரவு விடுதியில் காலை ஆறு மணி வரை கொண்டாடினார்

அவர் தனது 32 ஆவது பிறந்த நாளை பிரேசில், ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் பல்லாயிரம் பௌண்ட்களை செலவு செய்து ஐந்து நாட்கள் வரை கொண்டாடி இருந்தார்.

பரகுவே கால்பந்து அணியின் முன்னாள் வீரர நெல்சன் கியுவாஸ் அண்மையில் ரொனால்டினோவை சிறையில் சென்று சந்தித்திருந்தார். அது தொடர்பில் அவர் கூறும்போது, “அவர் சோகமாக உள்ளார். அவர் விரைவாக அதில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கிறேன்என்றார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், பார்சிலோனா மற்றும் .சி. மிலான் அணிகளுக்காக ஆடி இருக்கும் ரொனால்டினோ பார்சிலோனா சார்பில் லீக் கிண்ணத்தையும் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார். தவிர பிரேசில் அணிக்காக 1999 கோபா அமெரிக்க கிண்ணம் மற்றும் 2002 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளார். 2005 இல் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டியோர் விருதையும் அவர் வென்றார்.     

கடந்த மார்ச் 4ஆம் திகதி போலி ஆவணத்துடன் பரகுவே நாட்டுக்கு புகுந்ததற்காக பிடிபட்ட ரொனால்டினோ இரண்டு நாட்களின் பின் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சிறையில் சக கைதிகளினால் அன்பாக கவனிக்கப்பட்டு வரும் ரொனால்டினோ நாளாந்தம் கால்பந்து ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக சிறை வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதேபோன்று தச்சு வேலைக்கான பயிற்சியிலும் அவர் பங்கேற்று வருவதாக கூறப்பட்டுள்ளது

சிறையில் அவர் ஓய்வு எடுத்து வருகின்றபோதும் அவரது பொழுதுபோக்காக இருந்து வந்த இசை கேட்கும் பழக்கத்தை இழந்திருப்பதாகவும் சிறை வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.  

கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் ரொனால்டினோவின் வழக்கு விசாரணையில் இன்னும் தாமதம் ஏற்படும் என்று அவரது வழக்கறிஞர் செர்கியோ குயிரோஸ் குறிப்பிட்டுள்ளார்.