இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று (29) நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஹெமில்டனில் நடைபெற்ற இப்போட்டியில் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ஓட்டங்களை விளாசினார். இதில் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகள் அடங்கும்.
இதில் 24 தடவைகள் 50 ஓட்டங்கள் என்ற மைகல்லை எட்டி அதிக தடவைகள் 50 ஓட்டங்களைக் கடந்த விராத் கோஹ்லியின் சாதனையையும் அவர் முறியடித்தார்.
தொடக்க வீரராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்கி 10,000 ஓட்டங்களை எடுத்த 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றார்.
நியூசிலாந்துக்கு அதிர்ச்சித் தோல்வியை வழங்கிய இந்திய அணி
சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து….
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோஹித் சர்மா ஆரம்பத்தில் மத்திய வரிசையில் களமிறங்கி இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தடுமாறி வந்தார்.
இதனையடுத்து டோனியால் 2013ஆம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறக்கப்பட்டார்.
இதன்படி, தொடக்க வீரராக இறக்கப்பட்ட அதே ஆண்டிலேயே, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டைச் சதத்தை விளாசிய ரோஹித் சர்மா, அதற்கடுத்த ஆண்டிலேயே தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் விளாசினார்.
2014இல் இலங்கைக்கு எதிராக 264 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தார். தொடர்ந்து 2017இல் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டைச் சதத்தை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டைச் சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக ரோஹித் சர்மா திகழ்கிறார்.
மறுபுறத்தில் டி20 கிரிக்கெட்டிலும் 4 சதங்களை அடித்து அதிக சதங்களைக் குவித்த வீரராக அவர் இடம்பிடித்தார்.
எனவே, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி அடுத்தடுத்து இரட்டைச் சதங்களையும், சதங்களையும் குவித்து வருகின்ற ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அதிரடியாக ஆடி 65 ஓட்டங்களைக் குவித்தார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 10,000 ஓட்டங்களைக் குவித்து சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் ஆகியோருக்கு அடுத்து, தொடக்க வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அத்துடன் சர்வதேச அளவில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர்களில் இந்தியாவின் சச்சினுக்கு (214 இன்னிங்ஸ்) அடுத்த இடத்தை ரோஹித் சர்மா (219 இன்னிங்ஸ்) பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், நியூஸிலாந்துக்கு எதிராக அரைச் சதமடித்த ரோஹித் சர்மா, பிறகு சுப்பர் ஓவரில் சவுத்தியின் கடைசி 2 பந்துகளில் அபாரமான 2 சிக்ஸர்கள் மூலம் இந்தியாவுக்கு தொடரை வெற்றி பெற்றுக் கொடுத்தார்.
T20 அரங்கில் 30ஆவது அணிக்காக விளையாடவுள்ள பொல்லார்ட்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின்…..
இதன்படி போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ரோஹித் சர்மா, போட்டியின் பிறகு கருத்து தெரிவிக்கையில்,
“சர்வதேச அளவில் முதல் முறையாக சுப்பர் ஓவரில் விளையாடினேன். முதலில் இருந்தே அதிரடியாக விளையாடுவதா அல்லது ஒன்று இரண்டு ஓட்டங்களை அடிக்கலாமா என்று குழப்பமாக இருந்தது. ஆனால் இறுதியில் எல்லாம் நல்ல விதமாகவே முடிந்தது.
இன்று நான் நன்றாக விளையாடினேன். இன்னும் சிறிது நேரம் விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் ஆட்டமிழந்த விதம் எனக்கு வருத்தம் அளித்தது.
இந்தப் போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடலாம் என எங்களுக்கு தெரியும். இதுபோன்ற முக்கியமான போட்டியில அனைத்து வீரர்களின் பங்கும் இன்றும் சிறப்பாகவே அமைந்தது” என அவர் தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<