யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அபார வெற்றி ; பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு தோல்வி

U19 Schools Cricket Tournament 2022/23

158

இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி அபார வெற்றியை பதிவுசெய்ததுடன், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி தோல்வியை சந்தித்தது.

இன்று நடைபெற்ற போட்டிகளில், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி, வயம்ப றோயல் கல்லூரியை எதிர்கொண்டதுடன், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி, எல்பிட்டிய ஆனந்த மத்தியக் கல்லூரி அணியை எதிர்கொண்டது.

>> வெற்றிகளை பதிவுசெய்த யாழ். மத்தி, ஸ்கந்தவரோதயா கல்லூரிகள்!

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி எதிர் வயம்ப றோயல் கல்லூரி

ஆனந்த சாஸ்த்ராலயா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்துக் கல்லூரி அணியானது, வயம்ப றோயல் கல்லூரியின் பந்துவீச்சாளர் ஓசத கௌசல்யவின் பந்துவீச்சுக்கு முற்று முழுதாக தடுமாறியிருந்தது.

இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்ரீ நிதுஷான் மாத்திரம் அதிகபட்சமாக 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிந்தனர். இதன்காரணமாக இந்துக் கல்லூரி அணி 26.1 ஓவர்கள் நிறைவில் 80 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுளையும் இழந்தது. பந்துவீச்சில் ஓசத கௌசல்ய 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், உபதி இந்துஷார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வயம்ப றோயல் கல்லூரி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை 10 ஓட்டங்களுக்குள் இந்துக் கல்லூரி அணி ஆட்டமிழக்கச்செய்தபோதும், ஓசத கௌசல்ய மற்றும் இசுரங்க ஜயவர்தன ஆகியோர் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். அதன்படி வயம்ப றோயல் கல்லூரி அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஓசத கௌசல்ய 32 ஓட்டங்களையும், இசுரங்க ஜயவர்தன 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் இந்துக் கல்லூரி அணிசார்பில் ஆர்.டிலோஜன் மற்றும் எஸ். ஹர்ஷ முதுமின ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  • பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி – 80/10 (26.1), ஸ்ரீ நிதுஷான் 20, பி.தாருஜன் 13, ஓசத கௌசல்ய 11/4, உபதி இந்துஷார 4/2
  • வயம்ப றோயல் கல்லூரி – 84/2 (16.2), ஓசத கௌசல்ய 32, இசுரங்க ஜயவர்தன 34, ஆர்.டிலேஜன் 19/1, ஹர்ஷ முதுமின 33/1
  • முடிவு – வயம்ப றோயல் கல்லூரி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி எதிர் எல்பிட்டிய ஆனந்த மத்தியக் கல்லூரி

கராந்தெனிய மத்தியக் கல்லூரி மைதானத்தில் எல்பிட்டிய ஆனந்த மத்தியக் கல்லூரியை எதிர்கொண்ட யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி 121 ஓட்டங்களால் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு, ஆனந்த மத்தியக் கல்லூரி அணி வழங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் தலைவர் எஸ்.கீர்தன் அரைச்சதம் அடிக்க, பி. மதுசன் மற்றும் எம். சௌதஜன் ஆகியோர் தங்களுடைய பங்களிப்பை வழங்கினர்.

எஸ்.கீர்தன் அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பி. மதுசன் 42 ஓட்டங்களையும், எம். சௌதஜன் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க புனித பத்திரிசியார் கல்லூரி அணி 35.4 ஓவர்கள் நிறைவில் 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் சச்சின் சத்சிந்து மற்றும் திரந்த கௌஷான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆனந்த மத்தியக் கல்லூரி அணியானது, புனித பத்திரிசயார் கல்லூரியின் பந்துவீச்சுக்கு தாக்கபிடிக்கமுடியாமல் 33.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு தோல்வியை தழுவியது.

ஆனந்த மத்தியக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் சச்சின் சத்சிந்து அதிகபட்சமாக 17 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் ஆர்.ஷியன்சன் மற்றும் எஸ். சமிந்தன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, அணித்தலைவர் கீர்தன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

  • புனித பத்திரிசியார் கல்லூரி – 218/10 (35.4), எஸ். கீர்தன் 58, பி.மதுசன் 42, எம்.சௌதஜன் 41, சச்சின் சத்சிந்து 34/3, திரந்த கௌஷான் 44/3
  • ஆனந்த மத்தியக் கல்லூரி – 97/10 (33.1), சச்சின் சச்சிந்து 17, ஆர்.ஷியன்சன் 2/3, எஸ். சமிந்தன் 10/3
  • முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<