78 ஓட்டங்களில் சுருண்ட இந்தியா மோசமான சாதனை

166
Getty Image

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி வெறும் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்தது. 

இதன்மூலம் 79 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் தனது குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது. அத்துடன், டெஸ்ட் போட்டியொன்றின் முதல் இன்னிங்ஸில் மூன்றாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இது இடம்பிடித்தது

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது

இரண்டாவது பருவகாலத்திற்கான ICC டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் ஆரம்பம்

இதில் முதல் டெஸ்ட் சமநிலை ஆனதைத் தொடர்ந்து லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில், ஹெட்டிங்க்லியின் லீட்ஸ் மைதானத்தில் 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று (25) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.

அதன்படி, களமிறங்கிய இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். ரோஹித் சர்மாவை தவிர்த்து ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.

கேஎல் ராகுல் (0), புஜாரா (1), கோஹ்லி (7) ஆகியோர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தனர். பின்னர் வந்த ரஹானே (18) ஓரளவுக்கு தாக்கு பிடித்தார். ரஹானேவைத் தொடர்ந்து, ரிஷப் பாண்ட் (2) ஜடேஜா (4) ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறினர்.

Video – T-20 இல் ஹிட்மேனாக அவதாரம் எடுத்த DASUN SHANAKA..! | Sports RoundUp – Epi 173

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பும்ரா, ஷமி ஆகிய இருவரும் இந்த முறை ஓட்டம் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ரொபின்சன், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட 78 ஓட்டங்களினால் பல மோசமான சாதனைகளை படைத்தது.

முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இந்திய அணி, 79 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் முதல் இன்னிங்ஸில் தனது குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது

டெஸ்ட் சதங்களில் பவாத் அலாம் புதிய சாதனை

இதற்கு முன் 1975 லோர்ட்ஸ் டெஸ்டில் 42 ஓட்டங்கள், 1952 ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்டில் 58 ஓட்டங்களுக்கு இந்திய அணி சுருண்டது. தற்போது மூன்றாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையை இந்தியா பதிவு செய்தது

அத்துடன், டெஸ்ட் போட்டியொன்றின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் மூன்றாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இது இடம்பிடித்தது. இதற்குமுன் 1987 டெல்லி டெஸ்ட்டில் 75 ஓட்டங்கள், 2008 அஹமதாபாத் டெஸ்ட்டில் 76 ஓட்டங்களுக்கு இந்தியா சுருண்டது.

இதேவேளை, டெஸ்ட் அரங்கில் இந்தியா பதிவுசெய்த 9ஆவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்

இதனிடையே, இந்தப் போட்டியில் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் கோலியை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை நாதன் லயனுடன் (அவுஸ்திரேலியா) ஜேம்ஸ் ஆண்டர்சன் பகிர்ந்து கொண்டார் 

லயன், ஆண்டர்சன் ஆகிய இருவரும் தலா 7 தடவைகள் கோலியை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். ஸ்டுவரட் பிரோட், மொயின் அலி, பெட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 5 தடவைகள் கோலியை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…