ரிஷப் பண்ட்டுக்கு இந்திய T20I அணியில் இடமுண்டா?: டிராவிட் பதில்

101

இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ண அணியில் ரிஷப் பண்ட்டின் வாய்ப்பு குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்தியா – தென்னாபிரிக்க அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இரு அணிகளும் 2- 2 என சமநிலையில் இருந்த சூழலில் 5ஆவதும், கடைசியுமான T20I போட்டி நேற்று (19) பெங்களூருவில் நடைபெற்றது.

தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் இந்தப் போட்டியானது மழையின் குறுக்கீட்டினால் துரதிஷ்வசமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளும் 2 -2 என வெற்றியை பிரித்துக்கொண்டனர்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலிரெண்டு T20I போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரிஷப் பண்ட்டின் தலைமைத்துவம் குறித்து பலர் விமர்சனம் செய்தனர்.

குறிப்பாக தலைவர் பொறுப்பை ஏற்ற காரணத்தால் தான் அவருக்கு துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறியதாக விமர்சனம் எழுந்தது.

குறிப்பாக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 T20I போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 58 ஓட்டங்களை மட்டுமே அவர் பெற்றுக்கொண்டார். ஸ்ட்ரைக் ரேட்டும் மோசமாக இருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ண இந்திய அணியில் ரிஷப் பண்ட் நிச்சயம் இருப்பார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ரிஷப் பண்ட் இன்னும் நிறைய ஓட்டங்களை அடிக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து. ஆனால் அது பெரிய பிரச்சினை இல்லை. ஏனென்றால் அடுத்த சில மாதங்களுக்கு என்னுடைய திட்டத்தில் ரிஷப் பண்ட் தான் முக்கிய பங்காக இருக்கப்போகிறார்.

நான் எதையும் குழப்ப விரும்பவில்லை. மத்திய ஓவர்களில் அதிரடி காட்டி ஆட கூடிய வீரர்கள் தேவை. அப்போதுதான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்த முடியும். அதிரடியாக ஆட நினைத்து ஒரு சில போட்டிகளில் ஆட்டமிழந்து இருக்கலாம். ஆனால் மத்திய ஓவரில் ஒரு அதிரடி ஆட்டக்காரர், அதுவும் இடதுகை வீரர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டு IPL தொடரில் பெரியளவில் அவர் ஓட்டங்களைக் குவிக்கவில்லை என்றாலும், நல்ல ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடியிருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் IPL தொடரில் அபாரமாக ஆடி பெரிய ஓட்டங்களைக் குவித்திருந்தார். அதேமாதிரி ஆட்டத்தை விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவார் என நம்புகிறோம். மத்திய ஓவர்களில் அவர் மீண்டும் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<