இலங்கை – அவுஸ்திரேலியா மூன்றாவது ஒருநாள் போட்டி; சாதனைகள்

4013
 

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியினை பதிவு செய்திருப்பதோடு, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-1 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

நிஸ்ஸங்க – மெண்டிஸ் சாதனை இணைப்பாட்டத்தோடு இலங்கை அபார வெற்றி

இந்த வெற்றி ஒரு பக்கம் இருக்க இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வைக்கப்பட்ட சாதனைகள் குறித்து நோக்குவோம்.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் வெற்றி இலக்கான 292 ஓட்டங்கள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஒருநாள் போட்டியொன்றில் அணியொன்று துரத்தி (Chase) அடித்த அதிகூடிய வெற்றி இலக்காகும். இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி 288 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை துரத்தி அடித்ததே, இந்த மைதானத்தில் அணியொன்று துரத்தி அடித்த அதிகூடிய வெற்றி இலக்காகும்.

இதேநேரம் 292 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கானது இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக துரத்தி அடித்த அதிகூடிய வெற்றி இலக்காகவும் காணப்படுகின்றது. இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 281 ஓட்டங்களை துரத்தி அடித்ததே, இலங்கை அணி அவுஸ்திரேலியாவிற்கு எதிராக துரத்தி அடித்த கூடிய அதிகூடிய வெற்றி இலக்காக காணப்பட்டிருந்தது.

இப்போட்டியில் குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஜோடியானது இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 170 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இந்த இணைப்பாட்டம் இலங்கை அணி சார்பில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 2ஆம் விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக மாறியிருக்கின்றது. இதற்கு முன்னர் அரவிந்த டி சில்வா – குமார் சங்கக்கார ஜோடி 2006ஆம் ஆண்டில் 163 ஓட்டங்களை இரண்டாம் விக்கெட்டுக்காக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பகிர்ந்ததே, அதிகூடிய இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக காணப்பட்டிருந்தது.

இதேவேளை குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஜோடி இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகூடிய இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டத்தினை (178*) வெறும் 08 ஓட்டங்களால் தவறவிட்டிருந்தது.

இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் பெதும் நிஸ்ஸங்க தனது கன்னி ஒருநாள் சதத்துடன் 147 பந்துகளுக்கு 137 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதன் மூலம் அவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற இலங்கை வீரராக சாதனை படைத்திருந்தார். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சனத் ஜயசூரிய 2003ஆம் ஆண்டு 122 ஓட்டங்களை எடுத்ததே ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் எடுத்த அதிகூடிய ஓட்டங்களாக கருதப்படுகின்றது. இன்னும் பெதும் நிஸ்ஸங்க வெற்றி இலக்கொன்றினை விரட்டும் போது அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் கூடுதல் ஓட்டங்கள் எடுத்த, இலங்கை வீரராகவும் சாதனை படைத்திருக்கின்றார்.

இதுதவிர பெதும் நிஸ்ஸங்க அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் 50 ஓட்டடங்களுக்கு மேல் இரண்டு தடவைகள் எடுத்த, இலங்கையின் இரண்டாவது ஆரம்பத் துடுப்பாட்டவீரராகவும் மாறியிருக்கின்றார். 2012ஆம் ஆண்டு திலகரட்ன டில்ஷான் இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில், இரண்டு தடவைகளுக்கு மேல் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதலாவது ஆரம்பத் துடுப்பாட்டவீரராக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இப்போட்டியில் காயம் காரணமாக 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் வெளியேறிய குசல் மெண்டிஸ், காயம் காரணமாக ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களுடன் வெளியேறிய வீரராக சாதனை படைத்திருந்தார். இதற்கு முன்னதாக 1993ஆம் ஆண்டு ரொஷான் மஹாநாம மொரட்டுவயில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் காயம் காரணமாக மைதானத்தினை விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் துனித் வெல்லாலகே இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மொத்தமாக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இள வயது பந்துவீச்சாளராக (19 வயது 161 நாட்கள்) புதிய சாதனையினை நிலைநாட்டியிருக்கின்றார். இதற்கு முன்னர் இந்த சாதனையினை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் தென்னாபிரிக்க அணியின் வேய்ன் பர்னல் (19 வயது 283 நாட்கள்) நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மூன்றாவது ஒருநாள் போட்டி வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் இரண்டாவது தொடர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. இந்த வெற்றி இலங்கை மண்ணில் வைத்து, இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 20 வருடங்களில் பெற்ற முதலாவது தொடர்ச்சியான வெற்றியாக கருதப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<