ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை

165
England hit 498 for 4 to create world record

நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று (18) நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் ஆரம்பமாகியது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஜேசன் ரோய் மற்றும் பில் சோல்ட் களமிறங்கினர். ஜேசன் ரோய் ஒரு ஓட்டத்தை மட்டும் எடுத்து போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த பில் சோல்ட் மற்றும் டேவிட் மலான் நெதர்லாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 2 ஆவது விக்கெட்டுக்காக 200 ஓட்டங்களுக்கும் அதிகமாக குவித்தது.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்து அசத்தினர். பில் சோல்ட் 93 பந்துகளில் 122 ஓட்டங்களைக் குவித்தார். அதில் 14 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். 109 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் மலான் 125 ஓட்டங்கள் குவித்தார். அதில் 9 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜொஸ் பட்லர் – லியம் லிவிங்ஸ்டன் ஜோடி மீண்டும் நெதர்லாந்து அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்தனர். அதிரடியாக விளையாடிய ஜொஸ் பட்லர் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள் 7 பௌண்டரிகள் அடங்கலாக 162 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 498 ஓட்டங்களைக் குவித்தது. லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 481 ஓட்டங்களைக் குவித்ததே ஒருநாள் போட்டியில் உலக சாதனையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சாதனையை மீண்டும் இங்கிலாந்து அணியே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, 2016 ஆம் ஆண்டு நொட்டிங்ஹமில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 444 ஓட்டங்களைக் குவித்து முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த அணியாக இங்கிலாந்து அணி சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

எனவே, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2016, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை குவித்த அணியாகவும் இங்கிலாந்து அணி இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் பீட்டர் சீலார் 2 விக்கெட்டுகளையும். லோகன் மற்றும் ஷேன் ஷ்னேட்டர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 499 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

இதன்படி, 232 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 – 0 என முன்னிலை பெற்றுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<